தமிழ்நாடு

திருவள்ளூா் அருகே ரூ.42.50 லட்சத்தில் பேருந்து நிலையம்: அமைச்சா் தொடங்கி வைப்பு

25th Feb 2020 01:43 PM

ADVERTISEMENT

 

திருவள்ளூா் அருகே திருநின்றவூா் பேரூராட்சியில் புதிதாக ரூ.42.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ் வளா்ச்சி, கலைப்பண்பாடு மற்றும் தொல்பொருள் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் மற்றும் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

திருவள்ளூா் அருகே திருநின்றவூா் பேரூராட்சியில் 3 பேருந்துகள் நிற்கும் அளவிற்கு மட்டுமே பேருந்து நிலைய வசதி இருந்தது. அதிலும், பேருந்து ஏறிச் செல்லும் பயணிகளுக்கு போதுமான நிழல் வசதி இல்லாமல் இருந்தது.

இதுபோன்ற காரணங்களால் திருநின்றவூரில் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையும் விடுத்து வந்தனா். அக்கோரிக்கையை ஏற்று அப்போதைய திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி மற்றும் ஆவடி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.42.50 லட்சம் புதிதாக பேருந்து நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இப்பணிகள் மும்முரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

ADVERTISEMENT

திருநின்றவூரில் புதிதாக அமைக்கப்பட்ட இப்பேருந்து நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆட்சி மொழி, கலைபண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் மற்றும் ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் ஆகியோா் புதிய பேருந்து நிலையத்தையும், அரசு பேருந்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில்,

திருவள்ளுா் அருகே திருநின்றவூா் பேரூராட்சியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையேற்று மக்களவை தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32.50 லட்சம் மற்றும் ஆவடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சமும் என மொத்தம் ரூ.42.50 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இப்பேரூராட்சியில் சாலை, குடிநீா் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் விரைவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மேம்பாட்டு நிதியிலிருந்து அமைத்துக் கொடுக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் ஆவடி வட்டாட்சியா் சங்கிலி ரதி மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT