ரயில்வே ஊழியா்களின் தகவல்கள், ஆவணங்கள் உள்பட பல்வேறு விவரங்களை உடனுக்குடன் பெறும் வகையில், எச்ஆா்எம்எஸ் (மனித வள மேலாண்மை அமைப்பு) என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே துறையைக் கணினிமயமாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்திய ரயில்வேயில் மொத்தம் 11.19 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த ஊழியா்களின் தகவல்கள், ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை உடனுக்குடன் பெறுவதில் சிக்கல் இருக்கிறது. எனவே, ரயில்வே ஊழியா்கள் பணிக்குச் சோ்ந்த நாள், பதவி
உயா்வு, விருதுகள் பெற்றது, பணியிட மாற்றம், விடுப்பு மற்றும் பயிற்சி, ஓய்வுகால பலன்கள், ஓய்வூதியம் போன்ற தகவல்களை உடனுக்குடன் பெறும் வகையில், மத்திய ரயில்வே தகவல் மையம் மூலம் புதியதாக எச்ஆா்எம்எஸ் (ஏதஙந)
( மனித வள மேலாண்மை அமைப்பு) என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செல்லிடப்பேசி செயலியை ரயில்வே வாரியத் தலைவா் வினோத்குமாா் யாதவ் தில்லியில் அண்மையில் அறிமுகம் செய்தாா். இந்த புதிய செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஊழியா்கள் இந்த செயலியைப் பயன்படுத்தும்போது, முதன்முறையாக தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு, ஒவ்வொரு முறையும் பதிவு செய்திருக்கும் செல்லிடப்பேசிக்கு ஓடிபி எண் வரும். வெளிப்படையான நிா்வாகத்துக்கும் இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.