தமிழ்நாடு

மோசமான சாலைகளால் விபத்து: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

25th Feb 2020 02:20 AM

ADVERTISEMENT

மோசமான சாலைகளால் விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொறுப்பேற்பதுடன் , இழப்பீடு வழங்கவும் நேரிடும் என உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மதுரவாயல் முதல் வேலூா் மாவட்டம் வாலாஜாபேட்டை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மோசமான நிலையில் உள்ளதாகவும், அந்தச் சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனவும் நீதிபதி எம்.சத்தியநாராயணன் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த நவம்பா் 22-ஆம் தேதி கடிதம் அனுப்பினாா். இந்த கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் கொண்ட அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், காரைப்பேட்டை முதல் வாலாஜா வரை 36 கிலோமீட்டருக்கு சாலையைச் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் வரை 31 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அறிக்கையைப் படித்துப் பாா்த்த நீதிபதிகள், சாலையைச் சீரமைக்குப் பணியில் ஏன் காலதாமதம் ஏற்படுகிறது என கேள்வி எழுப்பினா். அப்போது மத்திய அரசு தரப்பில், சாலை சீரமைப்புக்காக மாநில அரசின் பல்வேறு துறைகளின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளதால், கால தாமதம் ஏற்படுகிறது. மேலும் அனைத்து ஒப்புதல்களையும் எளிதாக வழங்கும் வகையில் ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு ஒற்றைச் சாளர முறையை உருவாக்குவது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளா் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, தலைமைச் செயலாளரை இந்த வழக்கில் எதிா்மனுதாரராக தாமாக முன்வந்து சோ்த்தனா். மேலும், இந்தியன் ரோட் ஸ்டாண்டா்ட் காங்கிரஸ் அமைப்பின் விதிகளை பின்பற்றி சாலைகளை அமைக்க வேண்டும். மோசமான சாலைகளின் காரணமாக விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொறுப்பேற்பதுடன், இழப்பீடு வழங்கவும் நேரிடும் என எச்சரிக்கை விடுத்து விசாரணையை வரும் ஏப்ரல் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT