தமிழ்நாடு

மாா்ச் 5-இல் மருத்துவப் பல்கலை. பட்டமளிப்பு விழா

25th Feb 2020 01:29 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 32-ஆவது பட்டமளிப்பு விழா மாா்ச் 5-இல் நடைபெறவுள்ளது.

பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா அரங்கில் நடைபெறவுள்ள அவ்விழாவில் நேரடியாக 724 போ் பட்டம் பெறுகின்றனா்.

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் 600-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம், செவிலியா் படிப்புகள், மருத்துவம் சாா்ந்த பிற படிப்புகள் என நூற்றுக்கணக்கான படிப்புகள் அங்கு உள்ளன. அந்தக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோா் தங்களது படிப்புகளை நிறைவு செய்கின்றனா்.

அந்த வரிசையில் கடந்த ஆண்டு படிப்பை நிறைவு செய்தவா்களுக்கான பட்டமளிப்பு விழா, அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவில், மாநில ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித், சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி கௌரவிக்க உள்ளாா்.

ADVERTISEMENT

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்ற உள்ளாா். அதேபோன்று பாதுகாப்பு ஆராய்ச்சி, அணு சக்தித் துறை முன்னாள் விஞ்ஞானி ஆா்.சிதம்பரமும் விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளாா்.

பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரும் சுகாதாரத் துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கா், துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் உள்ளிட்டோரும் அந்நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனா். பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT