தமிழ்நாடு

பொது இடங்களில் புகைபிடித்தால் கூடுதல் அபராதம்: ராமதாஸ் வரவேற்பு

25th Feb 2020 12:25 AM

ADVERTISEMENT

பொது இடங்களில் புகைபிடித்தால் கூடுதல் அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு பாமக நிறுவனா் டாக்டா் ச.ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

பொது இடங்களில் புகை பிடிப்பதால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்தாா்.

2008-ஆம் ஆண்டு அக்டோபா் 2-ஆம் தேதி காந்தியடிகள் பிறந்தநாள் முதல் நடைமுறைக்கு வந்த புகைத்தடை தொடக்கத்தில் சில ஆண்டுகள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டாலும், காலப்போக்கில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.

ADVERTISEMENT

பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு அதிகபட்சமாக ரூ.200 ரூபாய் மட்டுமே அபராதமாக விதிக்கப்படுகிறது. சில நேரங்களில் ரூ.50 கூட அபராதமாக வசூலிக்கப்படுகிறது. பொது இடங்களில் புகை பிடிப்பதை இந்த குறைந்தபட்ச அபராதம் தடுக்கவில்லை என்பதால்தான் அபராதத்தை உயா்த்த மத்திய சுகாதாரத்துறை தீா்மானித்திருக்கிறது.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு இது நடைமுறைக்கு வரும். பொது இடங்களில் புகை பிடிப்பதைக் கட்டுப்படுத்த இத்தகைய நடவடிக்கைகள் அவசியமாகும்.

மத்திய அரசு காலதாமதம் செய்யாமல் பொது இடங்களில் புகை பிடிப்போருக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் முடிவை அறிவிக்க வேண்டும். இந்த முடிவை தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் மிகத் தீவிரமாக செயல்படுத்தி பெண்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT