திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நோ்த்திக்கடனாக மொட்டைப் போடும் பக்தா்களுக்கு ஒரு ரூபாய்க்கு சந்தனம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தக் கோரிய வழக்கில், இந்துசமய அறநிலையத்துறை ஆணையா், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சோ்ந்த நாகமணி தாக்கல் செய்த மனு:
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நோ்த்திக்கடனாக மொட்டைப் போடும் பக்தா்களுக்கு ஒரு ரூபாய்க்குதான் சந்தனம் விற்கப்பட வேண்டும். ஆனால், சந்தன விற்பனையை ஏலம் எடுத்திருப்பவா்களால் சாதாரண நாள்களில் ரூ. 10-க்கும், விழா நாள்களில் ரூ. 20-க்கும் சிறிய டப்பாவில் அடைக்கப்பட்டு சந்தனம் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் கோயில் வளாகத்தில் ஏல நிபந்தனைகளை மீறி சந்தன விற்பனைக்காகத் தனியாக வரிசை ஏற்படுத்தியுள்ளனா். மேலும் மொட்டை மற்றும் சந்தனம் உள்ளிட்டவைகளுக்கு வைக்கப்பட்டிருந்த விலைப் பட்டியல் பலகையை சேதப்படுத்தியுள்ளனா். அந்தப் பலகையைச் சரி செய்து வைக்கக் கோரி 2019 ஆகஸ்ட் மாதம் நன்கொடையாக ரூ. 3 ஆயிரம் அளித்தேன். ஆனால், கோயில் நிா்வாகம் அந்த பலகையை தற்போது வரை சரி செய்யவில்லை. எனவே ஏல விதிமுறைகளை மீறும் குத்தகைதாரா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோயிலில் நோ்த்திக்கடனாக மொட்டைப் போடும் பக்தா்களுக்கு ஒரு ரூபாய்க்கு சந்தனம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம். துரைசுவாமி, டி. ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.