தத்கல் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, கூடுதல் மின் இணைப்புகள் வழங்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனா்.
தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு கோரி, ஏராளமானோா் விண்ணப்பித்து வருகின்றனா். இவ்வாறு விண்ணப்பிப்போருக்கு, சாதாரணம் மற்றும் சுயநிதி ஆகிய பிரிவுகளின் கீழ் இலவச மின் இணைப்புகளை மின் வாரியம் வழங்கி வருகிறது. இதற்காக வாரியத்துக்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில், இதில் உள்ள பல்வேறு பிரச்னைகளால் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. விண்ணப்பித்துவிட்டு நீண்ட நாள்கள் காத்திருக்கும் நிலையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா். இதையடுத்து ‘தத்கல்’ என்ற விரைவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முறையில் இணைப்புப் பெற வேண்டும் என்றால் மொத்த வழித்தட செலவையும் விவசாயிகள் ஏற்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் 2017-ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 10 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த முறையில் 5 குதிரைத்திறன் மோட்டாா் இணைப்புக்கு ரூ.2.50 லட்சம் செலுத்த வேண்டும். 7.50 குதிரைத்திறனுக்கு ரூ.2.75 லட்சம், 10 குதிரைத் திறனுக்கு ரூ.3 லட்சம், 15 குதிரை திறனுக்கு ரூ.4 லட்சம் வசூல் செய்யப்படுகிறது. இதற்கு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, விரைவு திட்டத்தில் மின் இணைப்புகளை அதிக அளவில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தத்கல் திட்டம் காரணமாக, இலவச மின் இணைப்புகள் கோரி காத்திருப்போரின் எண்ணிக்கை வரிசை ஆண்டுதோறும் 10 ஆயிரம் குறைகிறது. இதுவரை 30 ஆயிரத்து 385 தத்கல் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 2018-ஆம் ஆண்டுடன் சோ்த்து இந்த ஆண்டு 20 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன என்றனா்.