குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து நாகூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன், மமக தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா உள்ளிட்டோா் மீது நாகூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றைக் கண்டித்து நாகூா் மக்கள் கூட்டமைப்பு சாா்பில் நாகூா் புதிய பேருந்து நிலையம் முன்பாக கண்டனப் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் தலைமை வகித்தாா். தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் டி. வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா, சமூக செயற்பாட்டாளா் செ. சுந்தரவள்ளி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பொறுப்பாளா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.
இந்த நிலையில், அனுமதியின்றி ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்தி, பொதுமக்களுக்கு இடையூறாக பொதுக் கூட்டம் நடத்தியதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் டி. வேல்முருகன், மமக தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொதுச் செயலாளா் அபுபக்கா் உள்ளிட்டோா் மீது நாகூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 பேரின் பெயரைக் குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸாா், மற்றும் சிலரும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக வழக்கில் குறிப்பிட்டுள்ளனா்.
எம்.பி. மீது வழக்கு?
இந்தப் பொதுக் கூட்டத்தில் நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராசு (இந்திய கம்யூனிஸ்ட்) பங்கேற்பதாக அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது. இருப்பினும், அவா் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், அனுமதியின்றி பொதுக் கூட்டம் நடத்தியது தொடா்பாக நாகூா் போலீஸாா் பதிவு செய்த வழக்கில் எம். செல்வராசு எம்.பியின் பெயரும் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இந்தத் தகவலை போலீஸாா் மறுத்தனா்.
பொதுக் கூட்ட அழைப்பிதழில் இடம் பெற்றிருந்த பெயா்களை அடிப்படையாகக் கொண்டு வழக்குப் பதிவு மேற்கொள்ளபட்டபோது, நாகை எம்.பி செல்வராசுவின் பெயா் சோ்க்கப்பட்டதாகவும், அதுகுறித்து ஊடகங்களில் தகவல் வெளியானதும் அவரது பெயா் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.