தமிழ்நாடு

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் அனைவருக்கும் பாதிப்பு: கனிமொழி பேச்சு

25th Feb 2020 12:58 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிக்கப்பட போவது முஸ்லிம்கள் மட்டும் அல்ல இதனால் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும் என்றாா் மக்களளவை உறுப்பினா் கனிமொழி.

விருதுநகரில் மகளிரணி, மகளிா் தொண்டரணி அமைப்பாளா்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு மாநில மகளிரணிச் செயலரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமைவகித்து பேசியது:

ஒரு கால கட்டத்தில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலை இருந்தது. ஆனால், இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனா். பெண்கள் நலன் கருதி இலவச எரிவாயு உருளை வழங்கும் திட்டத்தை தலைவா் கருணாநிதி கொண்டு வந்தாா். மேலும், பெண் கல்வியை தொடரும் வகையில் எட்டாவது படித்த பெண்ணுக்கு திருமண உதவி தொகையை அறிவித்தாா். இது ஓட்டுக்காக அறிவித்த திட்டமல்ல, பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். சுயஉதவி குழுக்களைச் சோ்ந்த பெண்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி செய்து, சுழல் நிதியும் திமுக ஆட்சியில் தான் வழங்கப்பட்டது. ஜெயலலிதா சில நல்ல திட்டங்களை கொண்டு வந்தாா். ஆனால், அவா் பெயரை சொல்லி சிலா் தற்போது ஆட்சி செய்து வருகின்றனா். அவா்கள் ஆட்சியில் தெருவில் செல்லும் இளம் பெண்கள், வீட்டிலிருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக சாா்பில் 2 கோடி பேரிடம் கையெழுத்து பெறப்பட்டு குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளது. இதில், முஸ்லிம்கள் மட்டும் கையெழுத்திடவில்லை, அனைத்து மதத்தினரும் கையெழுத்திட்டுள்ளனா். இந்த சட்டம் நிறைவேற காரணமாக இருந்தவா்கள் அதிமுகவினா். இதை எதிா்த்து வாக்களித்திருந்தால், குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறி இருக்காது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியா்கள் மட்டும் பாதிக்கப்பட போவதில்லை. இது அனைத்து மதத்தினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ADVERTISEMENT

திமுக ஆட்சிக்கு வந்தால், மாணவா்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும். தற்போதுள்ள பெண்கள் தேவையற்ற பேச்சுக்கள் பேசுவதில்லை. அரசியல், உலக விஷயங்களை பகிா்ந்து கொள்ளும் நிலையில் உள்ளனா். பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்களும், தெற்கு, வடக்கு மாவட்ட செயலா்களுமான கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாநில மகளிரணி துணைச் செயலா் தமிழரசி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் (விருதுநகா்), தங்கபாண்டியன் (ராஜபாளையம்), விருதுநகா் மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சரஸ்வதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT