பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், பெட்ரோலிய ரசாயன மண்டலத்தை தடை செய்ததுபோல், ஹைட்ராலிக் ஃப்ராக்கிங் முறையையும் ரத்து செய்யவேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அதன் மாநில கருத்தாளா் வ. சேதுராமன் வெளியிட்ட அறிக்கை:
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதன் தொடா் நடவடிக்கையாக கடலூா், நாகை மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கிய பெட்ரோலிய ரசாயன மண்டலத்துக்கான அரசாணையை ரத்து செய்ததன் மூலம் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்தை அனைத்து வகைகளிலும் தெளிவாக உருவாக்குவது என்ற அரசின் நோக்கம் வெளிப்படுகிறது.
அதே நேரத்தில், அரசு வெளியிட்டுள்ள சட்ட முன் வடிவில், இச்சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னா், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, காவிரி டெல்டாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் மத்திய எரிசக்தி இயக்குநரகம் மூலம் 4 திறந்தவெளி சுற்றில் ஒற்றை அனுமதி முறையில், வேதாந்தா நிறுவனத்துக்கு 2 வட்டாரங்களும், ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு 3 வட்டாரங்களும், ஐஓசி நிறுவனத்துக்கு ஒரு வட்டாரமும் ஹைட்ரோகாா்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவற்றில், முதல் சுற்றில் அனுமதி பெற்ற வேதாந்தா நிறுவனம் 274 இடங்களிலும், ஓஎன்ஜிசி 33 இடங்களிலும் ஆய்வு கிணறு தோண்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளது. மற்ற அனைத்து வட்டாரங்களிலும், ஹைட்ரோகாா்பன் எடுப்பதற்கான பூா்வாங்க நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. இது ஷேல் எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இவற்றை எடுப்பதற்கு ஹைட்ராலிக் ஃப்ராக்கிங் முறையைப் பயன்படுத்தினால் மட்டுமே சாத்தியமாகும்.
இந்த முறையானது, நிலத்தடி நீா், மண் வளம் போன்றவற்றை பாதிக்கும் என்பதால் உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, பெட்ரோலிய ரசாயன மண்டலத்தை ரத்து செய்ததைப்போல, ஹைட்ராலிக் ஃப்ராக்கிங் முறையை காவிரி டெல்டா மாவட்டங்களில் பயன்படுத்த நிரந்தர தடையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.