தமிழ்நாடு

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: 7-ஆவது முறையாக நீட்டிப்பு

25th Feb 2020 12:25 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் காலத்தை 7-ஆவது முறையாக மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. இதுதொடா்பாக, ஜெயலலிதாவின் உறவினா்கள், சசிகலா மற்றும் அவரது உறவினா்கள், அமைச்சா்கள் என 150-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. மேலும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவா்கள், அரசு மருத்துவா்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சி அளிக்கும்போது தாங்கள் கூறும் தரவுகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதாகவும், எனவே மருத்துவக் குழுவை அமைத்து அதன் முன்னிலையில் தங்களிடம் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிடுமாறும் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு விசாரணையின்போது, ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

ADVERTISEMENT

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 24-ஆம் தேதி 6-ஆவது முறையாக 4 மாதங்களுக்கு விசாரணை ஆணையத்தின் காலத்தை தமிழக அரசு நீட்டித்தது. இந்நிலையில், திங்கள்கிழமையுடன் (பிப். 24) விசாரணை ஆணையத்தின் காலம் முடிவடைந்ததையொட்டி, 7-ஆவது முறையாக மேலும் 4 மாதங்களுக்கு (வரும் ஜூன் மாதம் 24-ஆம் தேதி வரை) ஆணையத்தின் காலத்தை நீட்டித்து தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT