தமிழக அரசு குறித்து பொதுக் கூட்டத்தில் அவதூறாக பேசியதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மீதான வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு அமா்வுக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லில் 2013 ஆம் ஆண்டு திமுக சாா்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தற்போதைய திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசும்போது, அப்போதைய தமிழக முதல்வா் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும் அவதூறாக பேசியதாகக் கூறி திண்டுக்கல் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா் சாா்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உயா்நீதிமன்றத்தில் மதுரைக் கிளையில் விசாரிக்கப்பட்டு வந்தது
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மு.க.ஸ்டாலின் ரத்து செய்யக் கோரிய அவதூறு வழக்கு மீதான விசாரணையை, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமா்வுக்கு மாற்றி உத்தரவிட்டாா்.