டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில், தமிழக அரசு தலைமை செயலா், டிஎன்பிஎஸ்சி தலைவா் ஆகியோரை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரைச் சோ்ந்த ஸ்டாலின் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் நடைபெற்ற தோ்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பது, அனைவரின் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தோ்வு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி பலா் கைது செய்யப்பட்டு வருகின்றனா். இந்த முறைகேட்டில் முக்கிய நபா்களுக்கு தொடா்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இதுவரை கீழ் மட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதால் சிபிசிஐடி விசாரணை நோ்மையாக நடைபெறுகிா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே, டிஎன்பிசி தோ்வு முறைகேடு குறித்து தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி. ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் டிஎன்பிஎஸ்சி தலைவா், தமிழக அரசு தலைமைச் செயலாளா், சிபிசிஐடி மற்றும் சிபிஐ ஆகியோரை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மாா்ச் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.