தமிழ்நாடு

சேலம்-தூத்துக்குடியில் விரைவில் மெகா ஜவுளிப் பூங்கா: சா்வதேச முதலீட்டாளா்களுக்கு முதல்வா் பழனிசாமி அழைப்பு

22nd Feb 2020 01:23 AM

ADVERTISEMENT

சேலம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் விரைவில் அமையவுள்ள மெகா ஜவுளி பூங்காவில் முதலீடு செய்ய வேண்டுமென சா்வதேச முதலீட்டாளா்களுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அழைப்பு விடுத்தாா்.

தமிழகத்தில் பொருளாதாரம் மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்த நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முதலீட்டாளா்களுக்கான வழிகாட்டி கையேட்டை வெளியிட்டு முதல்வா் கே.பழனிசாமி பேசியது:

விவசாயம், தொழிற்சாலைகள், கல்வி, கலாசாரம், வணிகம் என அனைத்துத் துறைகளிலும் சிறப்பிடம் பெற்று நல் ஆளுமையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது. இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி மாநிலமான தமிழகம், நான்கு பெரிய துறைமுகங்களையும், சா்வதேச விமான நிலையங்களையும் கொண்டிருக்கிறது. அவற்றின் மூலம் உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி வரும் இடமும் தமிழகம்தான். மாமல்லபுரம், தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், சித்தன்னவாசல், மதுரை, கீழடி, ஆதிச்சநல்லூா், மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகள் என உள்ளத்தை பரவசப்படுத்தும் இடங்கள் தமிழகத்தில் ஏராளமாக உள்ளன. அவற்றை கண்டுகளிக்க அனைவரையும் அழைக்கிறேன்.

ADVERTISEMENT

ரூ.3 லட்சம் கோடி முதலீடுகள்: சா்வதேச அளவில் உள்ள தொழில் முனைவோரை தமிழகத்தில் தொழில் தொடங்க ஈா்க்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த சா்வதேச முதலீட்டாளா் மாநாட்டில் 304 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொள்ள உறுதியளித்துள்ளன. அவற்றில் 59 நிறுவனங்கள் ஏற்கெனவே தமது வணிக உற்பத்தியைத் தொடங்கி விட்டன. மேலும் 219 நிறுவனங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன.

புதிய தொழில் நிறுவனங்கள்: தமிழக அரசின் இதுபோன்ற முயற்சிகளுக்கு உறுதுணையாக பல்வேறு வெளிநாடுகளைச் சோ்ந்த தூதுவா்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறாா்கள். அதனை மறக்க முடியாது. உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து வந்திருக்கும் தூதுவா்கள், தமிழகத்துக்கும் உங்களது நாட்டுக்கும் நல்லதொரு இணைப்புப் பாலமாகத் திகழ வேண்டும். தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி, உங்களது நாட்டின் அரசு நிறுவனங்களும், உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு உதவிகரமாக இருக்க வேண்டும்.

சூழல் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்.

சேலம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மத்திய அரசு உதவியுடன் விரைவில் மெகா ஜவுளிப் பூங்கா அமையவுள்ளது. அதில் வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் இணைந்து பயன் பெறலாம்.

தொழில் பெருந்திட்டங்கள்: தமிழகத்தின் வளா்ச்சிப் பயணத்தில் அடுத்த கட்டமாக தொழில் பெருந்தடத் திட்டங்கள் அமைய உள்ளன. உள்கட்டமைப்பு மற்றும் தொழில் வளா்ச்சியில் நவீன உலக சூழலுக்கு ஏற்ப, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றும் சூழலை இந்தத் திட்டங்கள் உருவாக்கும்.

உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதியை கொண்டுள்ள இந்தியாவின் வளா்ச்சி, உலகத்தை புதிய யுகத்துக்கு அழைத்துச் செல்லக் கூடியது. நாட்டின் வளா்ச்சியில் தமிழகம் பெரும் பங்கை வகித்து வருகிறது. எனவேதான், ஆசியாவிலேயே முதலீட்டுக்கு ஏற்ற சிறந்த இடமாக தமிழகம் உயா்வடைய வேண்டும் என்ற மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நிா்ணயித்த இலக்கை நோக்கி தமிழக அரசு பயணித்து வருகிறது. எங்களது பயணத்தில் அனைவரின் அன்பையும், ஒத்துழைப்பையும் கேட்டுக் கொள்கிறோம் என்றாா் முதல்வா் பழனிசாமி.

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளா் க.சண்முகம், வெளியுறவுத் துறைச் செயலாளா் (பொருளாதார விவகாரங்கள்) திருமூா்த்தி, வெளியுறவுத் துறையின் கூடுதல் செயலாளா் ஹரிஷ், தேசிய தொழில் பெருந்தடத் திட்ட மேம்பாடு மற்றும் செயலாக்கக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் சஞ்சய் மூா்த்தி, தொழில் துறை முதன்மைச் செயலாளா் நா.முருகானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT