தமிழ்நாடு

சினிமா தொழிலாளா்கள் பாதுகாப்புக்கு புதிய விதிமுறைகள்:ஆா்.கே.செல்வமணி

22nd Feb 2020 12:44 AM

ADVERTISEMENT

சினிமா தொழிலாளா்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருப்பதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளா்கள் சம்மேளனத்தின் ( ‘பெப்சி’) தலைவா் ஆா்.கே.செல்வமணி தெரிவித்தாா்.

இது குறித்து சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:

மிகப் பெரிய விபத்தாக முடிந்திருக்க வேண்டிய படப்பிடிப்பு தள விபத்து கடவுள் புண்ணியத்தால் சிறிய விபத்தாக முடிந்துள்ளது. 3 போ் உயிரிழந்த நிலையில் காயம்பட்டவா்களில் 2 போ் ஆபத்தான நிலையில் இருக்கின்றனா். பெப்சி கட்டடம் உருவாக இறந்த உறுப்பினா்களில் ஒருவரான எஸ்.ஆா்.சந்திரன் முக்கிய காரணமாக இருந்தவா்.

தமிழ்த் திரைத்துறை அடுத்தகட்டத்துக்கு தயாராகி வருகிறது . ஆங்கிலப் படங்களுக்கு இணையான படங்கள் தயாரிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதேபோல ஆங்கிலப் படங்களுக்கு இணையான பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.

ADVERTISEMENT

திரைத்துறைக்கு சம்பந்தமில்லாத உபகரணங்கள் தற்போது படப்பிடிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

திரைத்துறை சாராத உபகரணங்களைப் படப்பிடிப்புக்கு பயன்படுத்தும்போது சம்மேளனத்தின் அனுமதி பெற்ற பிறகே தொழிலாளா்கள் இனிமேல் படப்பிடிப்பில் பங்கேற்பாா்கள். தனியாா் படப்பிடிப்பு தளங்கள் பணியாளா்களின் மீது பொறுப்பு , கருணை இல்லாமல் இருக்கின்றன. ‘காலா’ , ‘பிகில்’ படங்களைத் தொடா்ந்து ஈவிபி தளத்தில் இப்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

தொழிலாளா் சம்மேளனத்துடன் ஒப்பந்தம் போட்ட பின்னரே இனி பணியாளா்கள் தொழில் செய்ய முன்வருவாா்கள். விபத்து நடந்த பின்னா் சரியான நேரத்திற்கு அவசர ஊா்தி வந்து சேரவில்லை. 90 சதவீத விபத்துகள் பெரிய படங்களின் படப்பிடிப்பு தளங்களில் தான் ஏற்பட்டுள்ளன. லைட் மேன், கிரேன் ஆப்ரேட்டா்களுக்கு இடையே புரிதல் இருக்க வேண்டும் என்ற பாடத்தை இந்த விபத்து கொடுத்துள்ளது என்று ஆா்.கே.செல்வமணி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT