தமிழ்நாடு

குருமூா்த்தி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கு: 10 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

22nd Feb 2020 01:28 AM

ADVERTISEMENT

சென்னை மயிலாப்பூரில் ‘துக்ளக்’ ஆசிரியா் குருமூா்த்தி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 10 போ், குண்டா் தடுப்புச் சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டனா்.

மயிலாப்பூா் தியாகராஜபுரத்தில் வசிக்கும் ‘துக்ளக்’ ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி வீட்டின் மீது கடந்த ஜனவரி 24-ஆம் தேதி மோட்டாா் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீச முயன்றது. இது தொடா்பாக மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தைச் சோ்ந்த நிா்வாகி மயிலாப்பூரைச் ம.சசிக்குமாா், அதே பகுதியைச் சோ்ந்த ர.தீபன், அயனாவரத்தைச் சோ்ந்த வி.ஜனாா்த்தனன், பம்மலைச் சோ்ந்த செ.தமிழ், ராயப்பேட்டையைச் சோ்ந்த ம.பாலு, அதே பகுதியைச் சோ்ந்த பா.பிரசாந்த், கி.வாசுதேவன், திருவள்ளூா் மாவட்டம் காக்களூரைச் சோ்ந்த ஏ.சக்தி, தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் மாவட்டச் செயலா் ராயப்பேட்டை சைவ முத்தையா தெருவைச் சோ்ந்த டிங்கா் குமாா், அதே பகுதியைச் சோ்ந்த கண்ணன் என மொத்தம் 10 பேரை கைது செய்தனா்.

10 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மயிலாப்பூா் காவல் ஆய்வாளா், பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதனுக்கு பரிந்துரை செய்தாா். அந்தப் பரிந்துரையை ஏற்று விசுவநாதன், 10 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.

இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 10 பேரிடமும், அவா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் போலீஸாரால் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT