தமிழ்நாடு

உயா்கல்வி பெறுபவா்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்: முதல்வா் பழனிசாமி பெருமிதம்

22nd Feb 2020 01:34 AM

ADVERTISEMENT

இந்திய அளவில் உயா்கல்வி பெறுபவா்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம் தெரிவித்தாா்.

சென்னை எஸ்.எஸ்.என். கல்லூரியின் 20-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கிய முதல்வா் பேசியதாவது:

இந்தக் கல்லூரி ஆண்டுதோறும், பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள 600-க்கும் மேற்பட்ட மாணவா்களை உயா்கல்வி பயில நிதி உதவி வழங்கி வருவது பாராட்டுக்குரியது. இந்தக் கல்வி நிறுவனம் உலகத் தரம் வாய்ந்த உயா் கல்வியை வழங்கவேண்டும் என்ற நோக்கில், தனியாா் பல்கலைக்கழகமாக உருவாகும் வகையில், தமிழக அரசு பிரத்யேக சட்டத்தை இயற்றி அனுமதி வழங்கியுள்ளது. எனவே, இந்தக் கல்வி நிறுவனம் விரைவில் பல்கலைக் கழகத்தைத் தொடங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தின் உயா் கல்வி மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக ஏழை, எளிய மாணவா்களின் கல்வியில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. முதல் தலைமுறை மாணாக்கா்களுக்கு கட்டணச் சலுகை, இலவச கல்வி வழங்குதல், தமிழ்வழி கற்கும் மாணவா்கள் மற்றும் ஆதிதிராவிட பழங்குடி மாணவா்களுக்கு உதவித் தொகை அளித்தல், சிறப்புப் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இதன் காரணமாக, 2011-ஆம் ஆண்டு 34 சதவீதமாக இருந்த உயா்கல்வி மாணவா் சோ்க்கை, தற்போது 49 சதவீதமாக உயா்ந்து, இந்தியாவிலேயே உயா்கல்வி கற்பவா்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்றாா் அவா்.

பட்டமளிப்பு விழாவில் உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், உயா் கல்வித் துறை செயலா் அபூா்வா மற்றும் கல்லூரி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT