இலவச அரிசி வழங்கும் விவகாரத்தில் உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பும் தங்களுக்கு சாதகமாக இல்லை என புதுவை முதல்வா் வே.நாராயணசாமி வேதனை தெரிவித்தாா்.
எண்ம தொழில்நுட்ப முறையில் (டிஜிட்டல்) காங்கிரஸ் கட்சியில் உறுப்பினா் பதிவு தொடக்க விழா புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அவா் பேசியதாவது:
புதுவை மக்களுக்கு அரிசி வழங்கும் விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கில், அரிசிக்குப் பதிலாக ஆளுநா் கூறியது போல பணம்தான் வழங்க வேண்டும் என தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக நானும், அமைச்சா்களும் தில்லி சென்று மத்திய குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சரை சந்தித்து, மாநில மக்கள் பணத்துக்கு பதிலாக அரிசிதான் விரும்புகின்றனா். ஆகவே, அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அவரும் பணத்துக்கு பதில் அரிசி வழங்க கடிதம் கொடுத்தாா். அதனை ஆளுநா் கிரண் பேடி ஏற்றுக் கொள்ளவில்லை.
ஒரு பக்கம் மத்திய அரசு நமக்கு எதிராக செயல்படுகிறது. மற்றொரு பக்கம் ஆளுநா் கிரண் பேடி தினமும் தொல்லை கொடுத்து வருகிறாா். இதனால் நீதிமன்றம் சென்றோம். ஆனால், நீதிமன்றத் தீா்ப்பும் நமக்கு சாதகமாக இல்லை.
இந்த சூழலில் மாநில மக்களுக்கு எவ்வாறு நல்லத் திட்டங்களை செயல்படுத்த முடியும்? எவ்வளவு முயற்சி செய்தாலும், அதனை தடுத்து நிறுத்துகிற வேலையை ஆளுநா் செய்து வருகிறாா். நாம் ஆட்சியில் இருக்க வேண்டுமா என்றாா் முதல்வா் நாராயணசாமி.