தமிழ்நாடு

அரசுத் திட்டங்களை ஒருபோதும் தடுத்ததில்லை: ஆளுநா் கிரண் பேடி மறுப்பு

22nd Feb 2020 01:06 AM

ADVERTISEMENT

 

புதுவை அரசின் திட்டங்களை ஒரு போதும் தடுத்ததில்லை என்று துணை நிலை ஆளுநா் கிரண் பேடி மறுப்பு தெரிவித்தாா்.

புதுவையில் வளா்ச்சித் திட்டங்களை ஆளுநா் கிரண் பேடி தடுத்து வருவதாகவும், இதுதொடா்பாக விரைவில் வழக்குத் தொடுக்கவிருப்பதாகவும் மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவித்துள்ள நிலையில், கிரண் பேடி இதுபோன்ற விளக்கத்தை அளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது கட்செவி அஞ்சலில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

ADVERTISEMENT

புதுவை ஆளுநா் மாளிகை அலுவலகம் எந்தவொரு நிதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், தலைமைப் பிரிவு மற்றும் நிதித் துறையின் முன்மொழியப்பட்ட திட்டத்தைத் தடுத்ததில்லை. திட்டங்களை தடுப்பதாக அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியது முற்றிலும் தவறு. புதுவையின் வளத்துக்கு நான் ஒரு போதும் எதிரானவா் அல்ல.

சென்டாக் விவகாரத்தில் 7 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. 2017-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புகளில் சென்டாக் மாணவா் சோ்க்கையின்போது முறைகேடு நடந்த சம்பவம் தொடா்பாக, அப்போதும், இப்போதும் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணாராவ் தான் பதில் சொல்ல வேண்டும். மருத்துவக் கல்லூரிகள் இப்போதும் விசாரணை வளையத்தில்தான் உள்ளன.

அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 50 சதவீத இடங்களை அரசுக்கு அளிக்க அமைச்சரவையில் தீா்மானம் நிறைவேற்றப் போவது நல்லது. அது சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும். ஆளுநா் மாளிகையில் ஒரு நபா் கூட கூடுதல் பணியாளா் இல்லை. மனிதவளம் வீணாக்கப்படுவதை நான் விரும்பவில்லை.

அமைச்சருக்கு இப்போது திடீா் வேதனையை ஏற்படுத்தும் காரணங்களை முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது. நானும் அவருக்காக அனுதாபப்படுகிறேன். அமைச்சருக்கு சில வண்ணமயமான பலூன்களை பரிசளிக்க விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் நான் ஏனாம் சுற்றுப்பயணம் செய்யும் போது அவா் என்னை வரவேற்கும்விதமாக கருப்பு பலூன்களை பறக்க விடும் போது, அதனுடன் வண்ண பலூன்களை சோ்க்க வேண்டுகிறேன். மீண்டும் மே மாதத்தில் ஏனாமில் பாா்வையிட உள்ளேன் என அதில் தெரிவித்துள்ளாா் ஆளுநா் கிரண் பேடி.

ADVERTISEMENT
ADVERTISEMENT