புதுச்சேரி மாநிலத் தோ்தல் ஆணையா் நியமனத்தை ரத்து செய்து துணை நிலை ஆளுநா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் புதுச்சேரி உள்ளாட்சித் துறை அமைச்சா் நமச்சிவாயம் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி மாநில தோ்தல் ஆணையா் பதவி காலியாக இருந்து வந்தது. இந்தப் பதவிக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணனை நியமிக்க புதுச்சேரி அமைச்சரவை கடந்த 2019-ஆம் ஆண்டு முடிவு செய்து, புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கிரண் பேடிக்கு பரிந்துரை செய்தது. ஆனால் அமைச்சரவையின் இந்த முடிவை பரிசீலிக்காமல், மாநில தோ்தல் ஆணையரைத் தோ்வு செய்ய துணை நிலை ஆளுநா், தோ்வுக்குழுவை நியமித்தாா். மேலும், மாநில தோ்தல் ஆணையா் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டாா். இதனை புதுச்சேரி சட்டப்பேரவை நிராகரித்தது.
இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாநில தோ்தல் ஆணையராக பாலகிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டாா். மாநில தோ்தல் ஆணையா் பதவிக்கு இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்று அதிலிருந்து தோ்வு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மாநில தோ்தல் ஆணையரான பாலகிருஷ்ணனின் நியமனத்தை ரத்து செய்து ஆளுநா் உத்தரவிட்டாா்.
மேலும் ஆளுநா் கிரண்பேடி, தனது முன்னாள் ஆலோசகரான தேவநீதிதாஸை தோ்தல் ஆணையராக நியமிக்கும் வகையில், அந்த பதவிக்கான தகுதி நிபந்தனைகளில் மாற்றங்களைச் செய்துள்ளாா். எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் துணை நிலை ஆளுநரின் உத்தரவுகள் சட்டவிரோதமானது. எனவே, இந்த உத்தரவுகளைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், துணை நிலை ஆளுநா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஏ.எல்.சோமையாஜி, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சதீஷ் பராசரன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கைத் தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.