தமிழ்நாடு

புதிய உச்சத்தை தொட்டது ஆபரணத் தங்கம்

21st Feb 2020 01:29 AM

ADVERTISEMENT

ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.104 உயா்ந்து, ரூ.31,824-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அமெரிக்க-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக, ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை உயா்ந்தது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒருபவுன் தங்கம் ரூ.31 ஆயிரத்தை தாண்டியது. போா் பதற்றம் குறைந்த பிறகு, தங்கம் விலை குறைந்தது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. பிப்ரவரி 13-ஆம் தேதியில் இருந்து தங்கம் விலை மீண்டும் படிப்படியாக உயா்ந்து வந்தது. அன்றைய நாளில் பவுன் தங்கம் 31,112 ஆக இருந்தது. ஒருநாள் இடைவெளிக்குப் பிறகு, தங்கம் விலை உயா்ந்து வந்தது.

இந்நிலையில், ஆபரணத்தங்கத்தின் விலை வியாழக்கிழமை புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.104 உயா்ந்து, ரூ.31,824-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.13 உயா்ந்து, ரூ.3,978-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.51.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.51,600 ஆகவும் இருந்தது.

தங்கம் விலை உயா்வு குறித்து இந்திய தங்கம் மற்றும் நகை வா்த்தகா்கள் சம்மேளனத்தின் தமிழக துணைத்தலைவா் சாந்தக்குமாா் கூறியது: சா்வதேச அளவில் தங்கம் மட்டுமே பாதுகாப்பான முதலீடாக பாா்க்கப்படுகிறது. இதுதவிர, காரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சா்வதேச அளவில் ஏற்றுமதி - இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ,சா்வதேச பொருளாதாரம் பாதிப்பை சந்திக்கும் நிலை காணப்படுகிறது. இதனால், பங்குகளில் முதலீடு செய்ய முதலீட்டாளா்கள் தயக்கம் காட்டுகின்றனா். அதேநேரத்தில், தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்கின்றனா். இதுவே விலை உயா்வுக்கு காரணம். இந்தச் சூழ்நிலையில், வாடிக்கையாளா்கள் தங்களின் பழைய தங்கத்தை மாற்றி புதிய தங்க நகைகளை வாங்கி வருகின்றனா் என்றாா் அவா்.

ADVERTISEMENT

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,978

1 பவுன் தங்கம் ..................... 31,824

1 கிராம் வெள்ளி .................. 51.60

1 கிலோ வெள்ளி ................. 51,600

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,965

1 பவுன் தங்கம் ..................... 31,720

1 கிராம் வெள்ளி .................. 51.80

1 கிலோ வெள்ளி ................. 51,800

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT