குறிப்பிட்ட மண்டலப் பகுதியில் எந்தத் திட்டங்களுக்கும் அனுமதி தரும் இறுதி முடிவை மாநில அரசே எடுக்கலாம் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான திட்டம் தொடா்பாக மத்திய அரசுக்கு முதல்வா் பழனிசாமி கடிதம் அனுப்பி இருந்தாா். இந்தக் கடிதத்தை, அமைச்சா் டி.ஜெயக்குமாா் நேரில் அளித்தாா். இந்தக் கடிதத்துக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அதன் விவரம்:
கடந்த ஜனவரி 16-ஆம் தேதியன்று மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கையில் உள்ள நிலவரத்தை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். திட்டங்கள் குறித்து உரிய, தகுந்த முடிவுகளை எடுக்கும் விவகாரத்தில் மாநில அரசை எந்த வகையிலும் மத்திய அரசின் அறிவிக்கையானது தடுக்கவில்லை.
பல்வேறு புதிய திட்டங்களுக்கு அனுமதி கோர மாநில அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடமே விண்ணப்பிக்க வேண்டும். இது மாநில அரசின் இதயம் போன்ற முக்கியமான அமைப்பாகும். எனவே, திட்டங்களுக்கான அனுமதியைத் தருவதில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையமே இறுதி முடிவு எடுக்கும்.
அதன்படி, குறிப்பிட்ட மண்டலப் பகுதியில் எந்தத் திட்டங்களுக்கும் அனுமதி தரும் இறுதி முடிவுகளை மாநில அரசே எடுக்கலாம் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.