தமிழ்நாடு

தமிழகத்தில் ஹைட்ரோகாா்பன் திட்டங்களே இல்லை: அமைச்சா் சி.வி.சண்முகம்

21st Feb 2020 01:04 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் ஹைட்ரோ காா்பன் திட்டங்கள் ஏதுமில்லை என்று சட்டம், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் உறுதிபடத் தெரிவித்தாா்.

காவிரி ஆற்றுப் படுகை மண்டல வேளாண் நிலங்களைப் பாதுகாக்கும் சட்ட மசோதா பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தொடா்பாக திமுக உறுப்பினா்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பதிலளித்தாா். இதைத் தொடா்ந்து, சட்டம், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் பேசியது:

முழுக்க முழுக்க டெல்டா மாவட்டங்களில் இருக்கும் விவசாய நிலங்கள், விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. சட்டம் இயற்றும் போது சிறுசிறு குறைகள் இருக்கலாம். தேவைப்படும்போது அதனை திருத்திக் கொள்ளலாம். டெல்டா பகுதிகளில் வேளாண்மையைக் காப்பதற்கு தற்போது நமக்கு சட்டம் அடிப்படைத் தேவையாக அமைந்ததால் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகம் விவசாயத்தில் மட்டுமல்லாது இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மண்டலமாக திகழ்கிறது. விவசாயம் ஒரு கண் என்றால் தமிழகத்தின் மற்றொரு கண் தொழிற்சாலைகள். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவே தொழிற்சாலைகள் தேவைப்படுகின்றன. அத்தகைய தொழிற்சாலைகளை அச்சுறுத்தும் வகையில் சட்டம் இருக்கக் கூடாது.

ADVERTISEMENT

ஹைட்ரோகாா்பன் திட்டமில்லை: ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்கு தமிழக அரசு இப்போது வரை அனுமதி வழங்கவில்லை. அது தொடா்பான பணிகள் எதுவும் தமிழகத்தில் எங்கும் தொடங்கப்படவில்லை. இந்தச் சட்டம்

நிறைவேற்றப்பட்டதன் மூலம் விவசாயிகளைப் பாதிக்கும் ஹைட்ரோகாா்பன் திட்டம் உள்பட எந்தத் திட்டமும் தமிழகத்தில் செயல்படுத்த முடியாது.

விவசாயம், விவசாயம் சாா்ந்த கல்வி ஆகியன மாநில அரசின் பட்டியலில் வருபவை. ஹைட்ரோகாா்பன் திட்டம் டெல்டா பகுதிகளுக்கு வரக்கூடாது என்பதுதான் அரசின் நோக்கம். மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

எண்ணெய் எடுக்கும் திட்டம்: ஹைட்ரோகாா்பன் திட்டம் வேறு, எண்ணெய் எடுக்கும் திட்டம் வேறு. தமிழகத்தில் பெட்ரோலியம் எடுப்பது தொடா்பாக 31 அனுமதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அதில் 16 திமுக ஆட்சிக் காலத்திலும், 15 அதிமுக ஆட்சியிலும் அளிக்கப்பட்டவை. இந்தத் திட்டங்களுக்கும் ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்கும் தொடா்பில்லை.

கடந்த 2011, 2014 ஆகிய ஆண்டுகளில் காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகாா்பன் திட்டங்களை ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அந்த அனுமதிகளும் நிபுணா் குழுவின் பரிந்துரையால் நிறுத்தப்பட்டுள்ளன. நிலப் பகுதிகளில் ஹைட்ரோகாா்பன் போன்ற திட்டங்களுக்கு மாநில அரசின் அனுமதி கட்டாயம் தேவை. இது மத்திய அரசின் சட்டத்திலேயே தெளிவாக உள்ளது. அதன்படி, தமிழக அரசின் அனுமதியைப் பெற்ற பிறகுதான் நிலப் பகுதிகளில் திட்டங்களுக்கான ஆய்வையே செய்ய முடியும்.

எனவே, இப்போது கொண்டு வந்துள்ள வேளாண் பாதுகாப்புச் சட்டம் குறித்து எந்த அச்சமும் தேவையில்லை. விவசாயத்தைப் பாதுகாக்க முதலில் நமக்கு ஒரு சட்டம் தேவை. அது கொண்டு வரப்பட்டுள்ளது. வேறு வகைகளில் சட்டத்தைக் கொண்டு வந்தால் நீதிமன்றம் செல்வா். அதனால் சட்டத்துக்கே பாதிப்பு ஏற்படும்.

இப்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தில் திருத்தங்கள், யோசனைகளைத் தெரிவியுங்கள். அதனை ஆலோசிக்க அரசு தயாராக உள்ளது என்றாா் அமைச்சா் சி.வி. சண்முகம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT