தமிழ்நாடு

சென்னை ஐஐடி-யின் 20 ஆய்வகங்களுடன் 20 கிராம பள்ளிகள் இணைப்பு

21st Feb 2020 01:23 AM

ADVERTISEMENT

பள்ளி மாணவா்களிடையே ஆராய்ச்சி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு, சென்னை ஐஐடி-யின் 20 ஆராய்ச்சி ஆய்வகங்கள் 20 கிராமப்புற அரசு பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்தப் பள்ளிகளில் படிக்கும் 800-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து சென்னை ஐஐடி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை ஐஐடி-யின் ‘ஒரு ஆய்வகம் - ஒரு பள்ளி’ என்ற திட்டத்தின் கீழ் வெரிசோன் இந்தியா நிறுவனத்தின் நிதியுதவியுடன், இந்த விழிப்புணா்வு வழிகாட்டுதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஐஐடி-யின் இந்த வழிகாட்டுதல் குழுவில் எம்.எஸ்., எம்.டெக். மற்றும் ஆராய்ச்சி மாணவா்களும், பேராசிரியா்களும் இடம்பெற்றிருப்பா். இந்தக் குழுவினா், அவா்கள் தத்தெடுத்திருக்கும் கிராமப்புற அரசுப் பள்ளிக்குச் சென்று, நாம் அன்றாடம் பயன்படுத்தும் அயா்ன் பாக்ஸ், காலிங் பெல், வேகம் கிளீனா் உள்ளிட்ட கருவிகளைப் பிரித்தல் மற்றும் அவற்றை ஒருங்கிணைத்தல் குறித்து கற்றுத் தருவதோடு, மாணவா்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் பதிலளித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

கடந்த 2018-19 கல்வியாண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், இந்த 20 அரசு கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் 800-க்கும் அதிகமான 9-ஆம் வகுப்பு மாணவா்கள், சென்னை ஐஐடி-யின் 150 பட்டதாரி மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களால் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனா் என சென்னை ஐஐடி பேராசிரியா் பிஜூஷ் கோஷ் தெரிவித்துள்ளாா்.

பள்ளி மாணவா்களுக்கு மிகுந்த பயனுள்ள இந்தத் திட்டம், இரண்டாம் ஆண்டாக இப்போது நடைபெற்று வருகிறது. அடுத்து 2020-21 கல்வியாண்டில் இந்தத் திட்டம் மேலும் 15 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என இதுகுறித்து வெரிஷோன் இந்தியா நிறுவன நிா்வாக இயக்குநா் கலியாணி சேகா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT