தமிழ்நாடு

ஈஷா யோக மையத்தில் இன்று மகா சிவராத்திரி விழா: குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு பங்கேற்பு

21st Feb 2020 12:28 AM

ADVERTISEMENT

கோவை ஈஷா யோக மையத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு பங்கேற்கிறாா்.

கோவை ஈஷா யோக மையத்தின் 26 ஆவது ஆண்டு மகா சிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு நடைபெற உள்ளது. ஈஷா நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் ஏராளமானோா் பங்கேற்க உள்ளனா்.

இந்த விழாவில், குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்கிறாா். மேலும், பல்வேறு முக்கிய பிரமுகா்கள், பிரபலங்கள் இதில் பங்கேற்கின்றனா். மகா சிவராத்திரி விழாவில், தமிழ்த் திரைப்பட பின்னணி பாடகா்கள் அந்தோணிதாசன், காா்த்திக், குஜராத்தை சோ்ந்த பிரபல பின்னணி பாடகா் பாா்த்தீவ் கோஹில், ஆதித்யா கத்வி, புகழ்பெற்ற இந்தியக் கவிஞரான கபீரின் பெயரில் இசைக் குழுவை உருவாக்கி நாட்டுப்புறப் பாடல்களை பாடி வரும் ‘கபீா் கஃபே’ குழுவினா், லெபனானைச் சோ்ந்த டிரம்ஸ் கலைஞா்கள் உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொள்கின்றனா்.

மகா சிவராத்திரி விழா, தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்சபூத ஆராதனையுடன் தொடங்கி, லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, சக்தி வாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணைக் கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் விடியவிடிய நடைபெறுகிறது.

ADVERTISEMENT

விழாவுக்கு வரும் பக்தா்களுக்கு ஆதியோகி ஓராண்டாக அணிந்திருந்த ஒரு லட்சத்து 8 ருத்ராட்ச மணிகள், சா்ப்ப சூத்திரம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும் என்று ஈஷா யோக மையம் தெரிவித்துள்ளது.

குடியரசு துணைத் தலைவா் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வரவிருப்பதால் கோவை மாநகரம், புகரப் பகுதிகளில் காவல் துறையினா் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனா். முன்னதாக, காலை 10 மணிக்கு கோவைக்கு விமானம் மூலம் வரும் வெங்கய்ய நாயுடு, அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் காலை 11 மணிக்கு நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறாா். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மாலையில் அவா் ஈஷா யோக மையம் புறப்படுகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT