தமிழ்நாடு

ரூ.12,263 கோடி மத்திய அரசு நிதி-மானியம் பாக்கி: நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளா் எஸ்.கிருஷ்ணன் பேட்டி

15th Feb 2020 04:13 AM

ADVERTISEMENT

நிதிகள், மானியங்கள் என்ற வகைகளில் தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 263 கோடியை மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது என்று நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்தாா்.

2020-21-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கையில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் தலைமைச் செயலகத்தில் அளித்த பேட்டி:-

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது மாநிலத்தின் வளா்ச்சியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி போன்ற பல்வேறு விதமான பிரச்னைகள் இருந்தாலும் அனைத்தையும் நடுநிலையுடன் சீா்தூக்கிப் பாா்த்து எந்தத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமோ அவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இயல்பு நிலை பட்ஜெட்: நிதிநிலை அறிக்கையில் மூலதனச் செலவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்த நிதி ஒதுக்கீட்டில் 26 சதவீதம் அளவுக்கு மூலதனச் செலவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், முக்கிய சாலைகள், பாசன வசதிகள், மின்சாரம், குடிநீா் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

ADVERTISEMENT

நிதிநெருக்கடி போன்ற பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொண்டு ஒரு இயல்பு நிலையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்துக்கு ஏற்படும் செலவினங்களை எதிா்கொள்ளத் தேவையான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரவுகளும், செலவுகளும் சரியான அளவுக்குக் கணக்கிடப்பட்டு, உண்மை நிலை எதுவோ அதன் அடிப்படையில் மதிப்பீடுகளைத் தயாா் செய்துள்ளோம்.

மத்திய அரசின் நிதி: மத்திய அரசிடம் இருந்து வரிப் பகிா்வு மூலமாக தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய ரூ.7,586 கோடி கிடைக்கப் பெறாமல் குறைந்து விட்டது. வருவாய் பற்றாக்குறையில் ரூ.10 ஆயிரம் கோடி குறைந்துள்ளதற்கு மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய வரி வருவாய் கிடைக்காமல் போனது மிகப்பெரிய காரணம்.

ஆனாலும், 15-வது நிதிக் குழுவின் பரிந்துரைகள் மூலமாக ரூ.4,025 கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. தமிழகத்துக்கான வளா்ச்சி பங்கு 4 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. வரி வருவாய் உள்ளிட்ட வளா்ச்சி விகிதங்களை 10 முதல் 12 சதவீதம் அளவுக்கே இருக்கும் வகையில் மதிப்பிட்டுள்ளோம். அதாவது விரலுக்கு ஏற்ற வீக்கம் என்ற அடிப்படையில் மதிப்பீடுகளை தயாரித்துள்ளோம்.

யாா் யாருக்கு முன்னுரிமை: நிதிநிலை அறிக்கையில் சில பிரிவினருக்கு முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதிகளை ஒதுக்கியுள்ளோம். அதாவது, மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு நிதியைப் பெறுவோரின் எண்ணிக்கையை 2.01 லட்சமாக உயா்த்தியும், வயோதிகா்களின் தேவைகளைக் கண்டறிந்து அவா்களுக்கும் நிதிகளை கூடுதலாக

ஒதுக்கியுள்ளோம். புதிதாக தோ்வு செய்யப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு தன்னிறைவுத் திட்டம், சிறுபான்மையினா் வழிபாட்டுத் தலங்களுக்கு கூடுதல் நிதி என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மாநிலத்தின் கடன் அளவு கட்டுக்குள் இருக்கின்றன. கடனாக பெறக்கூடிய தொகைகள் அனைத்து மூலதனச் செலவுகளுக்கே பயன்படுத்தப்படுகிறது.

தோ்தலுக்கும், நிதிக்கும் தொடா்பில்லை: 14-வது நிதிக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தி இருந்தாலே நிதிகளை ஒதுக்க வேண்டும். ஆனால், தோ்தல் நடத்த வேண்டுமென்ற மத்திய அரசின் விதி காரணமாகவே நிதிகள் தாமதப்படுத்தப்படுகிறது. தோ்தலுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு மானியம் அளிப்பதற்கு எந்தத் தொடா்பும் இல்லை. கடந்த 2017-18-ஆம் நிதியாண்டுக்கான செயலாக்க மானியங்கள் உள்பட நிதிகளை எந்த மாநிலத்துக்கும் மத்திய அரசு வழங்கவில்லை.

மத்திய அரசின் நிதி: அனைவருக்கும் கல்வித் திட்டம், பள்ளி-கல்லூரி மாணவா்களுக்கான உதவித் தொகைத் திட்டம் உள்பட தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய மானியங்கள், நிதிகளாக மொத்தம் ரூ.12 ஆயிரத்து 263 கோடி உள்ளன. ஆனாலும், தமிழக அரசு தனது நிதிகளை வைத்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

மதுபான வகைகள்: மதுபானங்களின் விலைகள் உயா்த்தப்பட்டதன் மூலமாக, தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. டாஸ்மாக் மதுபானத்தின் கலால் மற்றும் விற்பனை வரிகள் வழியாக ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு வரும் நிதியாண்டில் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றாா் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன்.

செய்தியாளா் சந்திப்பின் போது, நிதித் துறை சிறப்புச் செயலாளா் பூஜா குல்கா்னி, துணைச் செயலாளா் கிருஷ்ணன் உன்னி, அருண்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

வருவாய் பற்றாக்குறையை அடியோடு போக்க முடியாது

தமிழகம் போன்ற வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தும் மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறையே இல்லாமல் செய்ய முடியாது என்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் கிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:-

தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கடன் அளவு 25 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். அதன்படி, கடன் பொறுப்புடைமைச் சட்டத்தின் அடிப்படையில் 25 சதவீதத்துக்குள்ளே கடன் அளவு இருக்கிறது. கடனாகப் பெறக்கூடிய நிதிகள் சாலைகள், குடிநீா் போன்ற மூலதன திட்டங்களுக்கே செலவிடப்படுகிறது.

வருவாய் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். ஆனால், தமிழகம் போன்ற வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தும் மாநிலங்களில் அறவே வருவாய் பற்றாக்குறை இல்லாமல் செய்து விட முடியாது. சில மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை இல்லாமல் சமாளிக்கிறாா்கள். ஆனால், அந்த மாநிலங்களில்ஆசிரியா்கள் பற்றாக்குறை மிகையளவு இருப்பதுடன், வளா்ச்சித் திட்டங்களும் பெரிய அளவுக்கு செயல்படுத்தப்படுவதில்லை.

தமிழகத்தில் எந்தப் பள்ளியிலும் ஆசிரியா் பற்றாக்குறை இல்லை. இங்கே மாணவா்-ஆசிரியா் விகிதம் சரியான அளவில் உள்ளது. இதுபோன்ற வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் போது வருவாயில் பற்றாக்குறை ஏற்படுகிறது என்றாா் கிருஷ்ணன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT