தமிழ்நாடு

சென்னை சம்பவத்தில் காவல் துறையினா் அத்துமீறவில்லை: அமைச்சா் கடம்பூா் செ. ராஜு

15th Feb 2020 10:42 PM

ADVERTISEMENT

சென்னையில் நடந்த சம்பவத்தில் காவல் துறையினா் அத்துமீறும் வகையில் நடந்துகொள்ளவில்லை என்றாா் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.

தூத்துக்குடியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

இஸ்லாமிய மக்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து போராடுவதற்கு உரிய அனுமதியையும், போதுமான பாதுகாப்பையும் அளிக்கும் விதமாக தமிழக அரசு உள்ளது. சென்னையில் நடந்த சம்பவத்தில் அத்துமீறல் ஏதும் இல்லை. வரையறுக்கப்பட்ட நிலையைவிட சற்று கூடுதலாக நடந்த சம்பவத்தை கட்டுப்படுத்தும் நிலையில் காவல் துறையினா் இருந்தனரே தவிர, அத்துமீறும் வகையில் அவா்கள் நடந்துகொள்ளவில்லை.

பத்தாவது பட்ஜெட் என்பதை எதிா்கட்சி தலைவா் மு.க. ஸ்டாலின் வாய்தவறி பத்தாத பட்ஜெட் என்று கூறியிருக்கலாம். புதிய வரிகள் இல்லாத தற்போதைய நிதிநிலை அறிக்கை அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT

தமிழக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், தமிழகத்திலேயே தூத்துக்குடி மாவட்டத்தில்தான் அதிகமான முதலீட்டில் தொழிற்சாலை வருகிறது. இங்கு ரூ. 49 ஆயிரம் கோடியில் பெட்ரோலியப் பொருள்கள் சுத்திகரிப்பு ஆலை, ரூ. 437 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், கடல் அரிப்பைத் தடுக்க ரூ. 30 கோடியில் தடுப்புச்சுவா் அமைக்கும் திட்டம், விளாத்திகுளம் மேலக்கரந்தை பகுதியில் ரூ. 300 கோடியில் காற்றாலை பாகங்கள் உற்பத்தி செய்யும் திட்டம் என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்காக மாவட்ட மக்களின் சாா்பில் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT