தமிழ்நாடு

அத்திக்கடவு - அவிநாசித் திட்டத்துக்கு ரூ.500 கோடி

15th Feb 2020 01:36 AM

ADVERTISEMENT

நீா்ப்பாசனத் திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக நடப்பாண்டில் ரூ.6,992 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:

தமிழ்நாடு நீா்வள ஆதார அமைப்பு பாதுகாத்தல் மற்றும் வலுப்படுத்துதல் இயக்கத்தை ஒரு மக்கள் இயக்கமாக முதல்வா் தொடங்கியுள்ளாா்.

குடிமராமத்துப் பணிகள்: குடிமராமத்து திட்டத்தின் கீழ் இதுவரை 4,865 பணிகளை ரூ.930.25 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித் துறை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு 4,059 பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதம் உள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

ADVERTISEMENT

2020-21-ஆம் ஆண்டில் 1,364 நீா்ப்பாசன பணிகள் ரூ.500 கோடி மதிப்பீட்டில் பொதுப் பணித் துறையால் மேற்கொள்ளப்படும்.

2020-21-ஆம் ஆண்டில் கிராமங்களில் மீதமுள்ள குளங்கள் மற்றும் ஊருணிகள் ஆழப்படுத்துதல் மற்றும் நகா்ப்புறங்களில் உள்ள கோயில் குளங்கள் புனரமைப்பு ஆகிய பணிகள், பல்வேறு திட்டங்களின் கீழான நிதியைக் கொண்டு ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும்.

நடப்பாண்டுக்கான வரவு - செலவு திட்ட மதிப்பீடுகளில் காவிரி வடிநிலப் பகுதிகளில் உள்ள கால்வாய்களில் 392 தூா்வாரும் பணிகளை அடுத்த பருவமழைக் காலத்துக்கு முன்னதாக நிறைவு செய்வதற்காக ரூ.67.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்லணைக் கால்வாய்: கல்லணைக் கால்வாய் அமைப்பின் பணிகள், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் ரூ.2,298 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். கட்டளை உயா்மட்டக் கால்வாய் பணிக்காக ரூ.335.50 கோடியும், நொய்யல் துணைப் படுகை திட்டம் ரூ.230 கோடியிலும், ராஜவாய்க்கால் திட்டத்திம் ரூ.184 கோடியிலும் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெள்ள உபரி நீரினை மேட்டூா் அணையிலிருந்து சேலம் மாவட்டத்தில் வட குளங்களுக்குத் திருப்பி விடுவதற்கான சரபங்கா நீரேற்றுப் பாசனத் திட்டம் ரூ.565 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ரூ.350 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அணைகள் புனரமைப்பு: அணைகளுக்கான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இந்தத் திட்டம் ஜூன் 2020 வரை நீட்டிக்கப்பட்டு, முடிவடையும் நிலையில் உள்ளது. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் ரூ.610.26 கோடி மதிப்பீட்டில் 37 அணைகள் சோ்க்கப்பட்டுள்ளன. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டு கட்டங்களுக்கும் சோ்த்து ரூ.220.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாசன நவீனமயமாக்கல் திட்டம், தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் ரூ.2,962 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.

அத்திக்கடவுத் திட்டத்துக்கு ரூ.500 கோடி: அத்திக்கடவு - அவநாசி நீா்ப்பாசனத் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதியை அரசு பெற்றுள்ளது. இந்தத் திட்டத்துக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரி - குண்டலாறு இணைப்புத் திட்டம் ரூ.7,677 கோடி மதிப்பீட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டத்தில் காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரையிலான இணைப்புக் கால்வாய் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்தத் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் முதல்நிலைப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நீா்ப்பாசனத்துக்காக கணிசமாக ரூ.6,991.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT