தமிழ்நாடு

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: விழிப்புணர்வு இரு சக்கர வாகனப் பேரணி

13th Feb 2020 08:36 PM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை: புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளதை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான இரு சக்கர வாகனப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 4ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (பிப். 14) தொடங்கி, 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 60 அரங்குகளில் தமிழ்நாட்டின் பிரதான புத்தக நிறுவனங்கள் லட்சக்கணக்கான நூல்களை காட்சிக்கும் விற்னைக்கும் வைக்கின்றன.

காலையில் புத்தகக் கண்காட்சியை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துப் பேசுகிறார். தமிழகத் தொல்லியல் துறையின் கீழடி அரங்கை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரியும், குழந்தைகளுக்கான கோளரங்கத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெ.வே. அருண்ஷக்திகுமாரும் திறந்து வைத்துப் பேசுகின்றனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் கு. சிவராமன், பாடநூல் கழகத் துணை இயக்குநர் சங்கர சரவணன் ஆகியோர் பேசுகின்றனர்.

தினமும் மாலை நடைபெறும் சொற்பொழிவில், ஊடகவியலாளர் மு. குணசேகரன், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் நா. அருள்முருகன், ஓவியர் மாருதி, பேராசிரியர் பா. மதிவாணன், இந்திய அரசின் விஞ்ஞான் பிரசார் நிறுவனத்தின் இயக்குநர் நகுல் பராசர், முதுநிலை அறிவியல் அறிஞர் த.வி. வெங்கடேஸ்வரன், திரைப்படப் பாடலாசிரியர் யுகபாரதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இராசு. கவிதைப்பித்தன், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ. கருப்பையா, எழுத்தாளர் ஆயிஷா நடராஜன், தொகுப்பாளர் ஈரோடு மகேஷ், எழுத்தாளர் சாத்தூர் லட்சுமண பெருமாள், திரைப்பட இயக்குநர் ஆர். பாண்டிராஜ், திருச்சி எம்பி சு. திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் பேசுகின்றனர்.

இந்நிலையில் புத்தகக் கண்காட்சியைக் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர வாகனப் பேரணி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. நகர்மன்ற வளாகத்தில் இந்தப் பேரணியை நகராட்சி மேலாளர் கிருஷ்ணவேணி தொடங்கி வைக்கிறார். எம்எஸ் சுவாமிநாதன் ஆய்வு நிறுவனத்தின் முதுநிலை அறிவியலாளர் ஆர். ராஜ்குமார் தலைமை வகித்தார்.

புத்தகக் கண்காட்சி ஒருங்கிணைப்புக் குழுவினர் நா. முத்துநிலவன், அ. மணவாளன், க. சதாசிவம், மு. முத்துக்குமார், எஸ்.டி. பாலகிருஷ்ணன், எல். பிரபாகரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT