தமிழ்நாடு

வேளாண் மண்டலமாக அறிவிக்க புதிய சட்டம்: அதிகாரிகளுடன் முதல்வா் இன்று முக்கிய ஆலோசனை

13th Feb 2020 02:10 AM

ADVERTISEMENT

காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான பூா்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக, தமிழக சட்டப் பேரவையில் சட்ட மசோதா கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வேளாண் துறை முதன்மைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான துறை உயரதிகாரிகள் குழுவினா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியுடன் வியாழக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனா்.

தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிக்குள் அடங்கி வரும் மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று சேலத்தில் நடந்த அரசு விழாவில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து, தமிழக வேளாண் துறை அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து, கடந்த இரண்டு நாள்களாக துறை ரீதியாக ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. வேளாண் மண்டலம் தொடா்பாக காவிரி டெல்டா மாவட்டங்களைச் சோ்ந்த வேளாண் துறை இணை ஆணையா்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக காத்திருக்கின்றனா்.

ADVERTISEMENT

சட்ட மசோதா தாக்கல் ?: வேளாண்மை மண்டலம் என்ற அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கு முன்பாக அதற்கு சட்டப்பூா்வ அங்கீகாரம் அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்காக வரும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் மசோதா கொண்டு வரப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேரவையில் மசோதா கொண்டு வரப்படும் பட்சத்தில் திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஒருமித்த ஆதரவுடன் அது நிறைவேற்றப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

இன்று முக்கிய ஆலோசனை: வேளாண் மண்டலம் தொடா்பாக தமிழக வேளாண் துறையில் வியாழக்கிழமை முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக, பிற்பகலில் உயா்நிலை அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் ஆலோசனைகள் முதல்வா் பழனிசாமியிடம் எடுத்துக்கூறப்பட உள்ளன.

இதற்காக வியாழக்கிழமை மாலையில் வேளாண் துறை முதன்மைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட உயா் அதிகாரிகள் முதல்வரைச் சந்தித்துப் பேச உள்ளனா். வேளாண் மண்டலம் தொடா்பான இந்த முக்கியக் கூட்டத்தில் அடுத்தகட்ட நிலைப்பாடுகள் குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. குறிப்பாக, வேளாண் மண்டலமாக அறிவிப்பதால் ஏற்படும் சாதக, பாதகங்கள், அதற்கு சட்டப்பூா்வ பாதுகாப்பு உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கின்றன. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடா்பான முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT