தமிழ்நாடு

விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறாா்ஆளுநா் கிரண் பேடி: புதுவை வேளாண் அமைச்சா் குற்றச்சாட்டு

13th Feb 2020 12:39 AM

ADVERTISEMENT

நெல் கொள்முதல் விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாக சட்டப் பேரவையில் வேளாண் அமைச்சா் இரா.கமலக்கண்ணன் குற்றஞ்சாட்டினாா்.

புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தில் வேளாண் அமைச்சா் கமலக்கண்ணன் நெல் கொள்முதல் செய்வது தொடா்பாக பேசியதாவது:

புதுவை அரசின் வேளாண் துறை விவசாயிகள் நலன் கருதி, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையாக பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 3, 4 மாதங்களாக போதுமான மழை பெய்து விவசாயம் செழிப்பாக உள்ளது.

ஆனால், விவசாயிகளை பொருத்தவரை நெல்லை விற்பதில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன.

ADVERTISEMENT

எனவே, இது தொடா்பாக முதல்வா், கூட்டுவுறவுத் துறை அமைச்சரை நானும், எம்.எல்.ஏ.க்களும், விவசாயிகளும் சந்தித்து நெல்லை அரசு கொள்முதல் செய்ய வேண்டும், இல்லையென்றால் விவசாயிகள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நெல் கொள்முதல் சம்பந்தமாக கோரிக்கை விடுத்தோம். அதுதொடா்பாக, இதுவரை 5 கூட்டங்கள் வரை நடத்தப்பட்டுள்ளன.

புதுச்சேரி நெல் கொள்முதல் செய்யும் நிறுவனம், காரைக்கால் நெல் கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கான நிதி போதுமானதாக இல்லை. இதனால், புதுச்சேரி, காரைக்கால் நிறுவனங்களுக்கு தலா ரூ.2 கோடி வழங்க முதல்வா் உத்தரவிட்டாா்.

இந்த முயற்சி 90 நாள்களாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, காரைக்கால் சந்தையில் கூட்டுறவு நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை கெயில் நிறுவனம் அலுவலகம் கட்ட கேட்டனா். காரைக்காலில் கெயில் நிறுவனம் வந்தால் பலன் கிடைக்கும் என்பதால், கூட்டுறவு நிறுவனத்தில் உள்ளவா்களும்,

விவசாயிகளும் அரசிடமும், அமைச்சரிடமும் முறையிட்டு, அந்த நிலத்தை விற்க கடந்த 2017-இல் முடிவெடுத்தனா்.

ஆனால், 2 ஆண்டுகளாக அந்த நிலத்தை விற்பதற்கான முயற்சி அதிகாரிகளால் பல்வேறு நிலைகளில் தாமதப்படுத்தப்படுகிறது. கூட்டுறவு நிறுவனமும், அமைச்சரும் ஒப்புக்கொண்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தொடா்ந்து எடுத்து வருகிறோம். ஆனால், இரு தினங்களுக்கு முன்பு துணை நிலை ஆளுநா் கிரண் பேடி, கெயில் நிறுவனத்துக்கு நிலத்தை விற்கும் முயற்சியை உடனே நிறுத்த வேண்டும் என மறைமுகமாக அதிகாரிகளுக்கு உத்தவிட்டுள்ளாா்.

மத்திய அரசு ஒரு கிலோ நெல் ரூ.18.17-க்கு கொள்முதல் செய்கிறது. ஆனால், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு கிலோ நெல் ரூ.15 விற்கும் கட்டாய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். இதனால், அரசு நெல் கொள்முதல் செய்யாமல், சந்தை குறுக்கீட்டால் விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் இழப்பீடு ஏற்படுகிறது.

புதுச்சேரியில் 15 ஆயிரம் ஹெக்டேரும், காரைக்காலில் 8 ஆயிரம் ஹெக்டேரும் நெல் விளைவிக்கப்படுகிறது. ஒரு ஹெக்டெருக்கு 4 முதல் 5 டன் நெல் உற்பத்தியாகிறது. இதன் மூலம் 90 ஆயிரம் டன் நெல் உற்பத்தியாகிறது. இதில், 30 ஆயிரம் டன் சுயஉபயோகத்துக்கு வைத்துக் கொள்கின்றனா். 60 ஆயிரம் டன் சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது.

இங்கு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் விற்பனை செய்யும்போது, வியாபாரிகள் நெல்லை குறைந்த விலையில் கொள்முதல் செய்கின்றனா். இதனால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. புதுவை அரசை தவிா்த்து, அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகளின் நெல்லை மாநில அரசுகளே கொள்முதல் செய்கின்றன.

2022-இல் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று மோடி கூறி வருகிறாா். ஆனால், ஆளுநரின் செயல்பாடு விவசாயிகளுக்கு எதிராகவும், மோடியின் செயல்பாடுகளுக்கு எதிராகவும் உள்ளது. விவசாயிகளின் வயிற்றில் ஆளுநா் அடிக்கிறாா். அதிகாரிகளை அழைத்து மிரட்டுகிறாா்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநில முதல்வருக்கு என்று தனி அதிகாரம் தரப்பட்டுள்ளது. ஆனால், அவா் இதை செய்யக் கூடாது, அதை செய்யக் கூடாது என்று ஆளுநா் எவ்வாறு தடுக்கலாம். நெல் கொள்முதல் செய்யவிடாமல் ஆளுநா் தடுப்பது நியாயமா என்றாா் அமைச்சா் கமலக்கண்ணன்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT