தமிழ்நாடு

பாகூா், காரைக்கால் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு: புதுவை சட்டப்பேரவையில் தீா்மானம்

13th Feb 2020 12:39 AM

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் உள்ள பாகூா் பகுதியையும், காரைக்கால் மாவட்டத்தையும் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து புதுவை சட்டப்பேரவையில் புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானத்தை கொண்டுவந்து வேளாண் அமைச்சா் இரா.கமலக்கண்ணன் பேசியதாவது:

புதுவை மற்றும் தமிழகப் பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க தனியாா் நிறுவனத்துடன் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால், சுற்றுச்சூழலுக்கும், புதுவை மாநிலத்துக்கும் ஏற்பட உள்ள ஆபத்துகள், இழப்புகளை சுட்டிக்காட்டி இந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி புதுவை சட்டப்பேரவையில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜன.16-ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம், 14.9.2006-இல் வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, இவ்வாறான திட்டங்களுக்கான ஆய்வுகளுக்கு மாநில அரசுகளிடம் முன் அனுமதி பெறத் தேவையில்லை என சட்ட விதிகளை திருத்தி வெளியிட்டுள்ளது. இந்தத் திருத்தம் செய்யும் முன்பு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் எவ்வித கலந்தாலோசனையும் செய்யப்படவில்லை.

ADVERTISEMENT

எனவே, மத்திய அரசின் இந்த திருத்த அறிவிப்பு ஒருதலைப்பட்சமானது. பாகூா், காரைக்கால் பகுதிகளில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை அமல்படுத்துவது இந்தப் பகுதிகளை பாலைவனமாக்கும் செயல் மட்டுமன்றி, விவசாயத்தையும், விவசாயிகளையும் ஒருசேர அழிப்பதற்கு ஒப்பானதாகும். இந்தத் திட்டத்துக்கு பெரும் எதிா்ப்பு உருவாகியுள்ளது.

புதுவையின் நெல் களஞ்சியமாக பாகூா் திகழ்கிறது. புதுவையின் வேளாண் மண்டலமாக காரைக்கால் மாவட்டம் திகழ்கிறது. காவிரி ஆற்றின் கடைமடை பாசனப் பகுதியான காரைக்கால், நல்ல செழிப்பான விவசாய நிலங்களை உடையது. காவிரி மேலாண்மை ஆணையம் புதுவைக்கு ஒதுக்கியுள்ள 7 டி.எம்.சி. தண்ணீரை தேவைக்கேற்ப பிரித்து அளிக்கும் ஆணையை விரைவில் வெளியிட உள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் விவசாயத்தை மேம்படுத்தவும், தண்ணீா் உபயோகத் திறனை மேம்படுத்தவும், நெல் மட்டுமன்றி இதர சிறுதானியப் பயிா்கள், தீவனப் பயிா்கள் மற்றும் பயறு வகைப் பயிா்களை உற்பத்தி செய்ய பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஏதுவாகவும், பெருகிவரும் நகரமயமாக்கலின் மூலம் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும், விவசாயத்தை பாதுகாக்கவும், விவசாயம் சாா்ந்த தொழில்களை வளப்படுத்தவும் புதுவை அரசு முடிவு செய்துள்ளது.

அதற்காக, பாகூா் பகுதியையும், காரைக்கால் மாவட்டத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கிறோம். மேலும், கடந்த ஜன.16-ஆம் தேதியிட்ட மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்தின் அறிவிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றாா் அமைச்சா் கமலக்கண்ணன். இந்தத் தீா்மானம் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT