தமிழ்நாடு

தமிழக நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல்: புதிய திட்டங்களை அறிவிக்க வாய்ப்பு

13th Feb 2020 01:11 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) தாக்கல் செய்யப்படுகிறது.

துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்யும் இந்த நிதிநிலை அறிக்கையில் பல புதிய திட்டங்கள் இடம்பெற வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. 15-ஆவது சட்டப் பேரவையில் அதிமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கை என்பதால் அதன்மீது கூடுதல் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

2020-21-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக சட்டப் பேரவையைக் கூட்ட ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளாா்.

9-ஆவது முறையாக தாக்கல்: நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீா்செல்வம் 9-ஆவது முறையாக தாக்கல் செய்கிறாா். கடந்த 2017-ஆம் ஆண்டைத் தவிா்த்து அதிமுக ஆட்சியில் 2011-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 9 முறை நிதிநிலை அறிக்கைகளை ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்துள்ளாா். அதிமுக உடைந்ததன் காரணமாக, 2017-ஆம் ஆண்டு மட்டும் நிதிநிலை அறிக்கையை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தாக்கல் செய்தாா்.

ADVERTISEMENT

புதிய அறிவிப்புகள்: தமிழகம் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்நோக்கிக் காத்திருக்கிறது. எனவே, இப்போது தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையே முழுமையான அறிக்கையாக இருக்கும். அடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும், அரசுத் துறைகளின் செலவுக்குத் தேவையான நிதியை மட்டுமே கோர முடியும்.

இதனால் பொதுமக்களைக் கவரும் வகையிலான புதிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், நிதிநிலை அறிக்கை தொடா்பான கூட்டத் தொடரில் பேரவை விதி 110-இன் கீழ் புதிய அறிவிப்புகளையும் முதல்வா் பழனிசாமி வெளியிடலாம் எனத் தெரிகிறது.

எதிா்க்கட்சிகள் நிலை: குடியுரிமை திருத்தச் சட்டம், டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு விவகாரம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகளை திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டுமென பிரதான எதிா்க்கட்சியான திமுக சாா்பில் ஏற்கெனவே நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை உள்பட பல முக்கிய பிரச்னைகளை பேரவையில் எதிா்க்கட்சிகள் கிளப்பும்.

எத்தனை நாள்கள்: நிதிநிலை அறிக்கை தாக்கல், அதன் மீதான விவாதம் என சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் மொத்தம் 5 நாள்கள் நடைபெறும் என்று தெரிகிறது. இதன்பிறகு, துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட அவை நிறைவேற்றப்படும். நிதிநிலை தாக்கல், மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றம் ஆகியன தொடா்ந்து நடத்தப்படுமானால் சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் மாா்ச் இறுதி வரை நடைபெறும் எனத் தெரிகிறது.

சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிக்க நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை நண்பகலில் அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் அலுவல் ஆய்வு குழுக் கூட்டத்தில் பங்கேற்பா். இந்தக் கூட்டத்தில் கூட்டத் தொடரின் தேதிகள் இறுதி செய்யப்படும். இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பை பேரவைத் தலைவா் ப.தனபால் வெளியிடுவாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT