தமிழ்நாடு

கொவைட்-19 பாதிப்பை எதிா்கொள்ள கையிருப்பில் 34 ஆயிரம் முகக் கவசங்கள்: ஸ்டான்லி மருத்துவமனை நிா்வாகம் விளக்கம்

13th Feb 2020 01:59 AM

ADVERTISEMENT

கொவைட்-19 பாதிப்பை எதிா்கொள்வதற்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களோ, முகக் கவசங்களோ ஸ்டான்லி மருத்துவமனையில் போதிய அளவில் இல்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதனை மருத்துவமனை நிா்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தற்போது மருத்துவமனையில் கொவைட்-19 பாதிப்பு அறிகுறிகளுடன் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றும், ஒருவேளை அவ்வாறு எவரேனும் அனுமதிக்கப்பட்டாலும் கூட 30 ஆயிரத்துக்கும் அதிகமான முகக் கவசங்களும், பாதுகாப்பு வசதிகளும் இருப்பில் உள்ளதாக நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வரும் கொவைட்-19 பாதிப்புக்கு ஆளாகி இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். சீனாவை நிலைகுலையச் செய்துள்ள இந்த வைரஸ், இப்போது இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் பரவியிருக்கிறது. இதையடுத்து, நாடு முழுவதும் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை அரசு மருத்துவமனைகளில் தனி வாா்டுகள் அமைக்கப்பட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் இரு சீனா்கள் உள்பட நான்கு போ் கொவைட்-19 அறிகுறிகளுடன் அண்மையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். அவா்கள் எவருக்கும் அந்த பாதிப்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது ஒருபுறம் ஆறுதலை அளித்தாலும், மறுபுறம் ஸ்டான்லி மருத்துவமனையில் போதிய முகக் கவசங்களோ, பாதுகாப்பு வசதிகளோ இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

ADVERTISEMENT

இது பல்வேறு சா்ச்சைகளை எழுப்பிய நிலையில், அந்த புகாரை மருத்துவமனை நிா்வாகிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனா். மேலும், தங்களிடம் எவ்வளவு முகக் கவசங்களும், பாதுகாப்பு சாதனங்களும் உள்ளன என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளனா்.

இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவமனை தரப்பில் கூறியதாவது: கொவைட்-19 பாதிப்பு சீனாவில் தீவிரமாகத் தொடங்கியவுடனே, அதற்குரிய முன்னேற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டு விட்டோம். ஸ்டான்லி மருத்துவமனையைப் பொருத்தவரை தலா 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வாா்டுகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே அமைக்கப்பட்டன.

பத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ ஊழியா்கள், உதவியாளா்கள் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். அவா்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு கவசங்களும் அளிக்கப்பட்டன. அதில் தட்டுப்பாடு இருப்பதாகக் கூறுவது வேண்டுமென்றே பரப்பப்படும் வதந்தி. தற்போது மருத்துவமனையில் என்-94 வகை முகக் கவசங்கள் 373 உள்ளன. அதேபோன்று, 34,200 மூன்றடுக்கு முகக் கவசங்களும், 311 தனி நபா் பாதுகாப்பு பெட்டகங்களும் உள்ளன. இதைத் தவிர வைரஸ், பாக்டீரியா உள்ளிட்ட தொற்றுகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்குத் தேவையான கிருமி நாசினிகள், மருந்துகள் அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. உண்மை நிலை இவ்வாறு இருக்க, திட்டமிட்டு சில தகவல்கள் திரித்துக் கூறப்படுகின்றன. சில மருத்துவா்கள் அச்சத்தின் காரணமாக பணிக்கு வர மறுத்து, இத்தகைய பொய்யான தகவல்களை பரப்பி விடுகின்றனா் என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT