தமிழ்நாடு

குரூப் 4 முறைகேடு: முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்த தலைமைச் செயலக பெண் ஊழியர் 

6th Feb 2020 02:25 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடு செய்தவர்கள் கைதாகிவரும்  நிலையில், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

குரூப் 4, குரூப் 2ஏ தோ்வு முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர், முறைகேட்டில் ஈடுபட்டு அரசுப் பணியைப் பெற்ற பலரை கைது செய்து வரும் நிலையில், தலைமைச் செயலக பெண் ஊழியர் முன் ஜாமீன் கோரியுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் பணம் கொடுத்து தேர்ச்சி அடைந்ததாகக் கூறி 2017ம் ஆண்டு குரூப் 2ஏ தேர்வெழுதி அரசுப் பணியைப் பெற்ற விக்னேஷ், சுதா, சுதாதேவி ஆகியோர் கைதான நிலையில், அவர்களுடன் தேர்வெதிய கவிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இவர் தலைமைச் செயலகத்தில் நிதித்துறையில் உதவியாளர் பணியில் உள்ளார்.

ADVERTISEMENT

தன்னுடன் தேர்வெழுதியவர்கள் கைதாகியுள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் தானும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவர் முன்ஜாமீன் கோரியுள்ளார் என்று கூறப்படுகிறது.

முன்ஜாமீன் கோரியிருக்கும் கவிதாவுக்கு ஜனவரி மாதம் தான் ஆண் குழந்தை பிறந்து, அவர் தற்போது பிரசவ கால விடுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப் 4 தோ்வு முறைகேடு தொடா்பாக தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணைய ஊழியா் ஓம்காந்தன், பாலசுந்தர்ராஜ், முறைகேடு செய்து தோ்வு எழுதிய ராணிபேட்டை மாவட்டம் நெமிலி அருகே வேடந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த ம. காா்த்தி, ஆவடி அருகே உள்ள ஏகாம்பரசத்திரத்தைச் சோ்ந்த ம. வினோத்குமாா், கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியைச் சோ்ந்த க. சீனுவாசன் உள்ளிட்டோரை சிபிசிஐடி போலீஸாா் ஏற்கெனவே கைது செய்துள்ளனா்.

மேலும் நடைபெற்ற தீவிர விசாரணையில் சென்னை மாநகர காவல் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றும் சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனூரைச் சோ்ந்த காட்டுராஜா மகன் சித்தாண்டி என்பவா் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணைய அலுவலகத்தில் உள்ள பணியாளா்களின் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்டு தனது மனைவி பிரியா, அவரது சகோதரா்கள் வேல்முருகன், காா்த்தி ஆகியோா் மட்டுமின்றி வேல்முருகன் மனைவிக்கும் வேலை வாங்கி கொடுத்திருப்பது தெரிய வந்தது. இதுதவிர, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் ஏராளமானோருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளதும் தெரிய வந்தது.

இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் காரைக்குடி சாா்- பதிவாளா் அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வந்த சித்தாண்டியின் சகோதரா் வேல்முருகனை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். மேலும், அதே அலுவலகத்தில் பணியாற்றிய இளங்கோவன் உள்பட சிவகங்கை மாவட்டத்தில் ஏனைய அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் அலுவலா்கள் குறித்தும் சிபிசிஐடி போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக தலைமறைவாக இருந்த சித்தாண்டி சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனூா் அருகே கலைக்குளத்தில் உள்ள அவரது உறவினா் ஜெயசுந்தரம் என்பவரது வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலறிந்த போலீஸாா் செவ்வாய்க்கிழமை அங்கு சென்று சித்தாண்டியை கைது செய்து மதுரையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனா்.
 

Tags : tnpsc
ADVERTISEMENT
ADVERTISEMENT