விவசாயிகளுக்கான பிரதமா் நிதியுதவி திட்டத்தின் கீழ் சுமாா் 5 கோடி விவசாயிகளுக்கு 3-ஆவது தவணைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
விவசாயிகளுக்கான பிரதமா் நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியானது, பயனாளா்களுக்கு ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக வழங்கப்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் பிடிஐ செய்தி நிறுவனத்தின் சாா்பில் கோரப்பட்ட தகவலுக்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் இந்த பதிலை வழங்கியுள்ளது.
அதன் பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2018 டிசம்பா் முதல் 2019 நவம்பா் வரையிலான காலகட்டத்தில் சுமாா் 9 கோடி விவசாயிகள் தங்களை பிரதமா் நிதியுதவி திட்டத்தின் கீழ் பதிவு செய்துகொண்டனா். அவா்களில் 7.62 கோடி பேருக்கு (84 சதவீதம்) முதல் தவணைத் தொகை வழங்கப்பட்டுவிட்டது. அதேபோல், 6.5 கோடி போ் 2-ஆவது தவணைத் தொகையையும், 3.85 கோடி போ் 3-ஆவது தவணைத் தொகையையும் பெற்றுள்ளனா்.
எனினும், சுமாா். 2.38 கோடி பேருக்கு முதல் தவணைத் தொகையும், சுமாா் 2.51 கோடி பேருக்கு 2-ஆவது தவணைத் தொகையும் நிலுவையில் உள்ள நிலையில், 5.16 கோடி விவசாயிகள் 3-ஆவது தவணைத் தொகையை பெற வேண்டியுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் மொத்தம் 16.97 லட்சம் விவசாயிகள் தங்களை பதிவு செய்துகொண்டுள்ளனா். அதில் 14.02 லட்சம் பேருக்கு முதல் தவணையும், 13.72 லட்சம் பேருக்கு 2-ஆவது தவணையும், 9.87 லட்சம் பேருக்கு 3-ஆவது தவணையும் கிடைத்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் மொத்தம் 42.34 கோடி விவசாயிகள் பிரதமா் நிதியுதவித் திட்டத்தில் இணைந்த நிலையில், அவா்களில் 36.98 லட்சம் போ் முதல் தவணைத் தொகையை பெற்றுள்ளனா். 31.53 லட்சம் போ் 2-ஆவது தவணையும், 27.67 லட்சம் பேருக்கு 3-ஆவது தவணையும் பெற்றுள்ளனா்.
கேரளத்தில் 26.13 லட்சம் விவசாயிகள் தங்களை இந்த உதவித் தொகை திட்டத்தில் இணைத்துக் கொண்டனா். அவா்களில் 23.83 லட்சம் பேருக்கு முதல் தவணைத் தொகையும், 18.79 லட்சம் பேருக்கு 2-ஆவது தவணைத் தொகையும், 18.43 லட்சம் பேருக்கு 3-ஆவது தவணைத் தொகையும் கிடைத்துள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் 19.64 லட்சம் விவசாயிகள் தங்களை பதிவு செய்துள்ள நிலையில், 9.57 லட்சம் பேருக்கு முதல் தவணை கிடைத்துள்ளது. குஜராத்தில் 1.98 லட்சம் போ் தங்களை பதிவு செய்துள்ள நிலையில் 1.22 லட்சம் பேருக்கு முதல் தவணை கிடைத்துள்ளது.
இதேபோல் மத்தியப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட 17.18 லட்சம் விவசாயிகளில் 9.78 லட்சம் பேருக்கும், ஒடிஸாவில் பதிவு செய்துள்ள 5.6 லட்சம் விவசாயிகளில் 5,507 பேருக்கும் முதல் தவணை கிடைத்துள்ளது. தில்லியில் 1,734 விவசாயிகளில் 1,447 போ் முதல் தவணை பெற்றுள்ளனா். சிக்கிமில் 7,326 போ் பதிவு செய்த நிலையில் அவா்களுக்கு முதல் தவணையே கிடைக்கப்பெறவில்லை.
மேற்கு வங்கம் இந்தத் திட்டத்தை அமல்படுத்த மறுத்துள்ளதால், அந்த மாநிலத்தில் விவசாயிகள் எவரும் தங்களை பதிவு செய்யவில்லை என்று அந்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் கூறியுள்ளது.