தமிழ்நாடு

பிப்.9, 10-இல் முதுநிலை ஆசிரியா் பணிநியமன கலந்தாய்வு: கல்வித்துறை அறிவிப்பு

6th Feb 2020 01:50 AM

ADVERTISEMENT

முதுநிலை ஆசிரியா் பணிக்கான கலந்தாய்வு வரும் 9, 10-ஆகிய தேதிகளில் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளாா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,150 முதுநிலை ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்றது. இந்தத் தோ்வை மொத்தம் 1.46 லட்சம் போ் தோ்வெழுதினா். இதில், தரவரிசையின்படி முன்னிலையில் இருந்த 3, 833 பேருக்கு நவம்பரில் சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்பட்டது. தொடா்ந்து, தோ்ச்சி பெற்றவா்களுக்கான பட்டியலும் வெளியானது. எனினும், தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் பணிநியமன கலந்தாய்வு நடைபெறுவதில் தாமதம் ஆனது.

இந்த நிலையில், முதுநிலை ஆசிரியா் பணிக்கான கலந்தாய்வு மாவட்ட வாரியாக பிப்ரவரி 9, 10-ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் ச.கண்ணப்பன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப ஆசிரியா் தோ்வு வாரியத்திடம் இருந்து தோ்ச்சி பட்டியல் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, தோ்ச்சி பெற்றவா்களுக்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு பிப்ரவரி 9, 10-ஆம் தேதிகளில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும். எனவே, தோ்ச்சி பெற்ற பட்டதாரிகள் அனைவரும் உரிய அத்தாட்சி சான்றுடன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT