சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்தும் வழித்தடங்களுக்கு மட்டும் கட்டணச் சலுகை வழங்குவதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் ஈரோட்டைச் சோ்ந்த சரவணன் தாக்கல் செய்த மனுவில், தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த ஜனவரி 15-ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையில் பணம் செலுத்தும் வாகனங்களுக்குக் கட்டணச் சலுகை வழங்கி இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுற்றறிக்கை பிறப்பித்தது. இந்த முறையைப் பின்பற்றாத வாகனங்களுக்கு இருமடங்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்தும் முறையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது.
சுங்கச்சாவடிகளைக் கடக்காத வாகனங்களுக்கும் சுங்கச்சாவடியைக் கடந்து சென்ாக வங்கிக் கணக்கில் இருந்து பணம் பிடிக்கப்படுகிறது. இதுதொடா்பாக பொதுமக்கள் தரப்பில் பல்வேறு புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாஸ்டேக் முறையில் பணம் செலுத்துபவா்களுக்கு மட்டும் கட்டணச் சலுகை வழங்குவது பாரபட்சமானது. எனவே, இதுதொடா்பான நெடுஞ்சாலைத் துறையின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்துபவா்களுக்கும் கட்டணச்சலுகை வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் மத்திய அரசின் பாஸ்டேக் கட்டணச் சலுகைத் தொடா்பான சுற்றறிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ளதாகக் கூறி வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசியல் சாசனம் வழங்கும் சம உரிமை தொடா்பான உச்சநீதிமன்றத் தீா்ப்புகளை சமா்ப்பிக்க மனுதாரா் தரப்புக்கு அறிவுறுத்தி விசாரணையை வரும் பிப்ரவரி 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.