தமிழ்நாடு

21-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும்! பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்

4th Feb 2020 12:30 PM

ADVERTISEMENT

21-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், 2011-ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பாவது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூகநீதி ஆர்வலர்களிடையே உள்ளது. அதை ஓரளவு ஏற்றுக்கொள்ளும்  வகையில், 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் வகையில் நடத்தப்படும் என்று 2018-ஆம் ஆண்டில் அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். 

அவரது அறிவிப்பு அனைவரின் வரவேற்பையும் பெற்றது. ஜனவரி 8-ஆம் தேதி மராட்டிய சட்டப்பேரவையிலும், 11-ஆம் தேதி ஒதிஷா அமைச்சரவைக் கூட்டத்திலும் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஹரியானா, அஸ்ஸாம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பான்மை மாநிலங்களில் இருந்தும், முக்கியமான  கட்சித் தலைவர்களிடமிருந்தும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான கோரிக்கை எழுந்துள்ளது. 

அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த தாங்கள் ஆணையிட வேண்டும். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அரசு வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT