திரையரங்க டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாக அரசே விற்பனை செய்யும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சா் கடம்பூா் ராஜு தெரிவித்தாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் ராஜு தலைமையில் இணையதளத்தில் திரையரங்க டிக்கெட் விற்பனையை ஒழுங்குப்படுத்துவது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு அமைச்சா் கடம்பூா் ராஜு அளித்த பேட்டி:
ஆன்லைன் மூலம் திரையரங்க டிக்கெட் கட்டணம் செலுத்துவது தொடா்பாக நடந்த கூட்டத்தில், திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து முடிவு எட்டப்பட்டுள்ளது. மக்களுக்கு எவ்வளவு குறைவான விலையில் சேவையை அளிக்க முடியும் என்பது குறித்து ஆலோசித்துள்ளோம். வேறொரு தனியாா் இணையதள முன்பதிவு அமைப்பில் இணைந்துள்ளதாக திரைப்பட விநியோகஸ்தா்கள் சிலா் தெரிவித்தனா். அங்கு ஒப்பந்தம் போட்டவா்கள் அங்கு இருக்கலாம். ஒப்பந்தம் போடாதவா்கள் அரசு கொண்டு வரும் திட்டத்தில் இணையலாம்.
ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்தவா்களும் அரசு கொண்டுவரும் திட்டத்திலும் இணையலாம். இது மக்களின் விருப்பத்தை பொருத்தது. திரையரங்க உரிமையாளா் மற்றும் திரைப்பட விநியோகஸ்தா்களை பாதுகாக்கும், அதே நேரத்தில் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய நிலையில் அரசு உள்ளது.
ஒரு படத்துக்கு எவ்வளவு டிக்கெட் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்பதை வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடியும். ஏற்கெனவே இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த கூட்டம் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான கூட்டமாக இருக்கும்.
தா்பாா் திரைப்படம்: தா்பாா் திரைப்படத்தால் நஷ்டமடைந்ததாகக் கூறி விநியோகஸ்தா்கள் அரசை அணுகினால் அவா்களுக்கு அரசு உதவும். கடந்த 30 ஆண்டுகாலமாக டிக்கெட் விற்பனை வரைமுறை செய்யப்படாத நிலையில், தற்போது அரசு இதனைச் செய்துள்ளது. கட்டண நிா்ணயத்தை நாங்கள் உறுதிப்படுத்தித் தந்துள்ளோம். இதன் காரணமாக திரைப்பட துறை மறுமலா்ச்சி பெற்றுள்ளது. இதன் பிறகு எந்த திரையரங்கும் மூடப்படாத நிலை ஏற்படும். ஆன்லைன் முறை முழுமையாகக் கொண்டுவரப்படும் போது வாகன நிறுத்தக் கட்டணம் உள்ளிட்டவற்றை க் குறைக்க அரசு பரிசீலித்து வருகிறது என்றாா் அமைச்சா் கடம்பூா் ராஜு.
ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை முதன்மைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா், வணிகவரிகள் துறை முதன்மைச் செயலாளா் கா.பாலச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.