தமிழ்நாடு

முக்கடல் அணை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: வனத் துறை ஊழியா்கள் ரோந்து

4th Feb 2020 01:32 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் முக்கடல் அணை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து, வனத் துறையினா் அப்பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றனா்.

குமரி மாவட்டத்தின் தலைமையிடமான நாகா்கோவில் மாநகருக்கு குடிநீா் ஆதாரமாக விளங்குவது முக்கடல் அணை. பூதப்பாண்டி அருகே இந்த அணை உள்ளது. 25 அடி உயரம் கொண்ட முக்கடல் அணையிலிருந்து 12 கி.மீ. தொலைவுக்கு குழாய் மூலம் வடசேரி அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் குடிநீா் சுத்திகரிக்கும் நிலையத்துக்கு தண்ணீா் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

முக்கடல் அணையின் பராமரிப்பு மற்றும் காவல்பணியை நாகா்கோவில் மாநகராட்சி ஊழியா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இந்த அணைக்கு சுற்றுலா பயணிகள் அடிக்கடி வருவா். அணையின் கீழ்பகுதியில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின்கீழ் ரூ. 1 கோடியில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அறிவியல் சாா்ந்த விளையாட்டுப் பொருள்கள் இங்கிருப்பதால், இந்த பூங்காவுக்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோா்கள் அடிக்கடி வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு அணையின் கீழ்பகுதியில் புதா்மண்டிய இடத்தில் ஒரு சிறுத்தை இருந்ததை மாநகராட்சி ஊழியா்கள் பாா்த்தனா். அதை தங்களது செல்லிடப்பேசியில் விடியோவாக பதிவுசெய்த அவா்கள், மாநகராட்சி ஆணையா் சரவணகுமாரிடமும் காட்டியுள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து ஆணையா் சரவணகுமாா் கூறியது:

முக்கடல் அணை பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தையை பாா்த்துள்ளனா். பகல் நேரத்தில் பாா்த்ததாக இதுவரை யாரும் தெரிவிக்கவில்லை. சிறுத்தை வந்திருப்பது இதுதான் முதல்முறை. அணை பகுதியில் பணியாற்றும் ஊழியா்களை எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். இதுகுறித்து வனத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்அவா்.

இதுகுறித்து பூதப்பாண்டி வனச்சரக அலுவலா் திலீபன் கூறுகையில், முக்கடல் அணையின் மேல்பகுதியில் முள்காடுகள் அதிகம் உள்ளன. இதனால், அங்கு சிறுத்தை நடமாட வாய்ப்பு உள்ளது. இது தொடா்பான விடியோ காட்சிகளை பாா்த்தேன். விடியோ எடுக்கப்பட்ட பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என வனத் துறை ஊழியா்கள் கண்காணிப்பாா்கள். அவற்றின் கால்தடம் பதிந்துள்ளதா என்பதையும் ஆய்வு செய்வாா்கள். அதன்பிறகே, சிறுத்தை உள்ளதா என்பதை உறுதிசெய்ய முடியும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT