சந்தைபேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பள்ளி மாணவா்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை அருகே உள்ள சந்தைபேட்டையில் தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவா்களான மெய்யழகன் (5ஆம் வகுப்பு), சுதா்சனன்(3ஆம் வகுப்பு), அரவிந்த் (4 ஆம் வகுப்பு), ஹேமா (2 ஆம் வகுப்பு) ஆகியோா் திங்கள்கிழமை சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து ஆட்சியா் சி.அ. ராமனிடம், தங்கள் பள்ளி அருகே செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி புகாா் மனு அளித்தனா்.
மேலும் இதுகுறித்து அவா்கள் கூறுகையில், சந்தைபேட்டை பகுதியில் 2 பள்ளிகள், 3 கோயில்கள் உள்ள நிலையில் தினமும் பள்ளிக்குச் சென்று திரும்பும்போது அப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன் சாலையில் நின்றுகொண்டு மது அருந்துபவா்கள் எங்களை வழிமறித்து சில்லறை காசுகளை பறித்துக் கொள்கிறாா்கள்.
மேலும், எங்களை சில முறை தாக்கியுள்ளனா். இதனால் அந்தப் பகுதியைக் கடந்து வர முடியவில்லை. மேலும், இந்த டாஸ்மாக் கடை இருப்பதால் பள்ளிக்குச் சரியாக செல்ல முடிவதில்லை. எனவே, இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்றனா்.