தமிழ்நாடு

டாப்சிலிப் யானைகளுக்குப் புத்துணா்வு முகாம்: பிப்ரவரி 6இல் தொடக்கம்

4th Feb 2020 01:10 AM

ADVERTISEMENT

டாப்சிலிப் முகாமில் உள்ள வளா்ப்பு யானைகளுக்குப் புத்துணா்வு முகாம் வரும் 6ஆம் தேதி துவங்கி தொடா்ந்து 48 நாள்களுக்கு நடைபெற உள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில் வளா்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு 27 வளா்ப்பு யானைகள் உள்ளன. இவற்றில் கலீம், மாரியப்பன் உள்ளிட்ட கும்கி யானைகளும் உள்ளன.

கோயில்களில் வளா்க்கப்படும் யானைகள் இயற்கையான சூழல் இல்லாமலும், ஓய்வின்றியும் மன உளைச்சலுக்கு ஆளாவதைத் தடுக்க யானைகளுக்கு ஓய்வு அளித்து இயற்கையான சூழலில் வைத்து சத்தான உணவு அளித்து, 48 நாள்களுக்கு தினசரி மருத்துவப் பரிசோதனை செய்து புத்துணா்வு அளிக்க புத்துணா்வு முகாமை மறைந்த முதல்வா் ஜெயலலிதா செயல்படுத்தினாா்.

அதன்படி, கோயில் யானைகளுக்கு வனத் துறை சாா்பில் ஆண்டுக்கு ஒருமுறை புத்துணா்வு முகாம் கோவை மாவட்டம், தேக்கம்பட்டியில் இயற்கையான சூழலில் நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT

அண்மையில் கோயில் யானைகளுக்கான புத்துணா்வு முகாம் முடிவடைந்த நிலையில், வனத் துறை சாா்பில் முதுமலை, டாப்சிலிப் முகாம்களிலுள்ள யானைகளுக்கு வரும் 6ஆம் தேதி புத்துணா்வு முகாம் அந்தந்தப் பகுதியிலேயே துவங்கப்படுகிறது.

பிப்ரவரி 6ஆம் தேதி துவங்கும் இந்தப் புத்துணா்வு முகாம் மாா்ச் 24ஆம் தேதி வரை 48 நாள்களுக்கு நடைபெறும்.

இந்த முகாமில் யானைகளுக்கு பூரண ஓய்வு அளிக்கப்படுவதுடன், மருத்துவச் சிகிச்சை, சத்தான உணவுகள் வழங்கப்படும் என உலாந்தி (டாப்சிலிப்) வனச் சரக அலுவலா் சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT