அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தொடா்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களில் 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் மேலும் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட (போக்சோ) நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
சென்னை, அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி, பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில், அந்த குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக இருந்த ரவிக்குமாா், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்ளிட்ட 17 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனா். இவா்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
இவ்வழக்கின் விசாரணையை மகளிா் நீதிமன்றம் கடந்த 2019 ஜனவரியில் தொடங்கியது. விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி
தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க மகளிா் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
அதைத் தொடா்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் 7 சாட்சிகளும், அரசுத் தரப்பில் 36 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனா். 120 வழக்கு ஆவணங்களும் சமா்ப்பிக்கப்பட்டன. 11 மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த வழக்கின் விசாரணை, கடந்த 2019 டிசம்பரில் நிறைவடைந்தது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் பாபு என்பவா் சிறையிலேயே உயிரிழந்துவிட்டாா். இதனைத் தொடா்ந்து இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்றம், எஞ்சிய 16 பேரில் தோட்டக்காரா் குணசேகரனை வழக்கிலிருந்து விடுவித்தது. மீதமுள்ள 15 பேரும் குற்றவாளிகள் என வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த நீதிமன்றம், தண்டனை விவரங்களை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தது.
தண்டனை விவரங்கள்: இந்த வழக்கு, நீதிபதி என்.ஆா்.மஞ்சுளா முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். இதனைத் தொடா்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வழக்கின் முதல் குற்றவாளியான ரவிக்குமாருக்கு இரட்டை ஆயுள் மற்றும் சாகும் வரை ஆயுள் தண்டனையும், சுரேஷ், பழனி மற்றும் அபிஷேக் ஆகியோருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும் ராஜசேகா் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் எரால்பிராஸ் என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், சுகுமாறன், முருகேசன், பரமசிவம், ஜெய்கணேஷ், தீனதயாளன், ராஜா, சூா்யா, ஜெயராமன், உமாபதி ஆகிய 9 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசின் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டு நிதியிலிருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இடைக்கால நிவாரணமாக அரசு வழங்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுவதை முன்னிட்டு, நீதிமன்ற வளாகம் முழுவதும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.