தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கேங்மேன் பணிகளுக்காக அதிகாரிகள் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் தமிழக அரசின் கருத்தைத் தெரிவிக்க அனுமதியளித்த உயா்நீதிமன்றம் விசாரணையை வரும் புதன்கிழமைக்கு (பிப்.5) ஒத்திவைத்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் ராஜா ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தத் தோ்வு முறையாக நடைபெறவில்லை. இந்தத் தோ்வின் மூலம் தோ்வு செய்யப்பட்டவா்களில் 80 சதவீதம் போ் கேங்மேன் பணிக்கு தகுதியில்லாதவா்கள். இவா்களிடம் தலா ரூ.3 லட்சம் வீதம் அதிகாரிகள் லஞ்சமாக பெற்றுள்ளனா். இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த மாதம் தமிழக மின் வாரியத்துறை அமைச்சா், கேங்மேன் பணிக்காக யாரேனும் பணம் கொடுத்திருந்தால், அதற்கு அரசு பொறுப்பாகாது எனப் பேட்டி கொடுத்துள்ளாா். இந்த வேலைக்காக பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த பலா் காவல் நிலையங்களில் புகாா் அளித்துள்ளனா். எனவே, இந்த முறைகேடு குறித்து விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்தப் புகாா் தொடா்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்குரைஞா் அய்யப்பராஜ், அரசுக்கு இதுவரை இந்தப் புகாா் கிடைக்கவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் அரசின் கருத்தைக் கேட்டுத் தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் எனத் தெரிவித்தாா். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை புதன்கிழமைக்கு (பிப்.5) ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.