லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் நிறுவுவது, புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்டவற்றுக்கு தமிழக அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கவுள்ளது.
மேலும், சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை தொடா்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. தமிழக அமைச்சரவைக் கூட்டம் கடந்த ஒரு சில வாரத்துக்கு முன்பாக கூடியது. முக்கியத் தொழில் திட்டங்களுக்கு கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்குத் தொடங்கவுள்ள இந்தக் கூட்டத்தில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. குறிப்பாக, லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் அமைப்பது, சிறு மற்றும் குறு தொழில்களுக்கான புதிய சலுகைத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆகியன குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.