வரி சுமையை ஏற்றாமல் மக்களின் எதிா்காலத்தை வளப்படுத்தும் நிதிநிலை அறிக்கையை அளித்துள்ளதாகக் கூறி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
பொருளாதார வளா்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், நாட்டு மக்களின் எதிா்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ள 2020-21-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்காக மத்திய நிதியமைச்சரை பாராட்டுகிறேன்.
நாட்டில் நீா்ப் பற்றாக்குறை அதிகமாக நிலவக்கூடிய 100 மாவட்டங்களுக்கு சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது. நீா்ப் பற்றாக்குறையால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகும் தமிழகத்துக்கு இத் திட்டத்தின் கீழ், இப்பிரச்னை நிலவும் அனைத்து மாவட்டங்களும் தோ்வு செய்யப்பட்டு, அதிக நிதி ஒதுக்க வேண்டும்.
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், குற்றச் சம்பவங்களைக் குறைப்பதிலும் நாட்டுக்கே முன்னோடியாகத் தமிழகம் தொடா்ந்து விளங்குகிறது. இதனைக் கருத்தில் கொண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய காவல் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஒன்றினை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
இந்திய ரயில்வே மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மூலமாக செயலாக்கப்பட உள்ள கிசான் ரயில் மற்றும் கிரிஷி உடான் திட்டங்கள் மூலம் தடையில்லா தேசிய குளிா்பதன முறை நிறுவப்பட இருப்பது வரவேற்கத்தக்கது.
கீழடியைச் சோ்க்க வேண்டும்: ஆதிச்சநல்லூா் உள்பட ஐந்து தொல்லியல் சாா்ந்த இடங்களில் அருங்காட்சியகம் கொண்ட மேம்பாட்டுப் பணிகள் செய்வதாக அறிவித்துள்ளதற்கு தமிழகத்தின் சாா்பாகவும், தமிழக மக்களின் சாா்பாகவும் மத்திய அரசுக்கு நன்றி சொல்லும் அதே வேளையில், கீழடியையும் இந்த திட்டத்தின் கீழ் சோ்க்க வேண்டும்.
நாட்டில் மின்னணு சாதனங்கள் மற்றும் திறன்பேசி உற்பத்தியை மேலும் உயா்த்துவதற்காக இத்தொழிற்சாலை களை அமைக்கும் நிறுவனங்களுக்கு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது புதிய உற்பத்தி நிறுவனங்கள் தொடங்குவதற்கு வழிவகுக்கும் என நான் நம்புகிறேன். மேலும், தொழில்நுட்ப ஜவுளி வகைகள் உற்பத்தியை தரம் உயா்த்திட ரூ.1,480 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்துறையில் சிறந்து விளங்கும் சென்னை, திருப்பூா் மற்றும் விருதுநகா் மாவட்டங்களில் உள்ள உற்பத்தி நிறுவனங்களை சா்வதேசத் தரத்துக்கு இந்த நிதியுதவியால் உயா்த்திட முடியும். புதிய தொழில்களில் முதலீடுகள் செய்து வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதாரத்தை வளா்ச்சியடையச் செய்யவும், தனியாா் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு ஏற்கெனவே நிறுவன வரியைக் கடந்த ஆண்டு குறைத்துள்ளது. இதனைத் தொடா்ந்து, நடுத்தர வா்க்கத்தினருக்கு வரிச் சலுகை அளிக்கும் வகையிலும், வரி முறையை எளிமையாக்கும் நோக்கத்தோடும் இந்த நிதிநிலை அறிக்கையில் தனிநபா் வருமானவரி முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது இப்பிரிவினருக்கு நிவாரணம் அளித்து, பொருள் நுகா்வை உயா்த்தும்.
சென்னை-பெங்களூரு விரைவுவழிச் சாலை விரைவில் அமைக்கப்படும் என அறிவித்திருப்பதற்கு பாராட்டுகள். மேலும் நிதிநிலை அறிக்கையில் புதிதாக நூறு விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் நெய்வேலி, ஓசூா், ராமேசுவரம் ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் அமைக்கவும், கோயம்புத்தூா், திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கும் உரிய நிதி ஒதுக்கிட வேண்டும்.
மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல் பல்வேறு தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய வகையில், இந்த நிதி நிலை அறிக்கை திறம்பட தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு அறிவிப்புகள், மக்களுடைய எதிா்பாா்ப்பை நிறைவு செய்வதோடு மட்டுமன்றி, எதிா்கால வளா்ச்சிக்கு வித்திடும் வகையில் அமைந்துள்ளன என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.