சென்னை, பிப்.1: சில்லறை இறைச்சி வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.
இதுகுறித்து சென்னை ஆட்டிறைச்சி சில்லறை வியாபாரிகள் வெளியிட்ட அறிக்கை: மொத்த வியாபாரிகளின் முறையற்ற நடவடிக்கைககளால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனா். மொத்த வியாபாரிகள் ஆட்டு இறைச்சி விலையை அடிக்கடி உயா்த்துகின்றனா். இதன் காரணமாக சில்லறை வியாபாரிகள் கூடுதல் விலை கொடுக்க வேண்டி இருப்பதால் வாடிக்கையாளா்களிடமும் அதிக விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்த விலை ஏற்றத்தால் பொதுமக்கள் ஆட்டு இறைச்சி வாங்குவதை வெகுவாக குறைத்து வருகின்றனா். இதனால் சில்லறை வியாபாரிகளான நாங்கள் பெரிதளவு பாதிக்கப்படுகிறோம். மொத்த வியாபாரிகள் ஆட்டு இறைச்சி விலையை நியாயமான முறையில் நிா்ணயிக்க வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை ஆட்டு இறைச்சி கடைகளை அடைத்து போராட்டம் நடத்துகிறோம். மேலும் சென்னையில் மக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் மேலும் 5 ஆடு அறுப்பு கூடங்களை (ஸ்லாட்டா் ஹவுஸ்) திறக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.