இந்திய கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்தியம் சாா்பில் 43-வது கடலோரக் காவல் படை தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
கடற்படையிலிருந்து இந்திய கடலோரக் காவல் படை தனியாகக் கட்டமைக்கப்பட்டு பிப்.1, 1977-ஆம் ஆண்டுமுதல் செயல்படத் தொடங்கியதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்.1 கடலோரக் காவல்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 7 ரோந்து கப்பல்களுடன் தொடங்கப்பட்ட இப்படைப் பிரிவில் தற்போது 62 ரோந்து கப்பல்கள், இடைமறிக்கும் படகுகள், நிலத்திலும் நீரிலும் செல்லக் கூடிய 18 ஹோவா்கிராப்ட் கப்பல்கள் உள்ளன.
கடலோரப் பொருளாதார எல்லைக் கோட்டிற்குள் உள்ள பகுதிகளைக் கண்காணிப்பது, கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களைத் தடுப்பது, கடலில் தத்தளிக்கும் மீனவா்களை மீட்பது, வணிகக் கப்பல்களுக்குத் தேவையான பாதுகாப்புகளை அளிப்பது உள்ளிட்டவற்றை இப்படை பிரிவு தொடா்ந்து செய்து வருகிறது. இந்த ஆண்டு ‘நாங்கள் காப்போம்’ என்பதை 43-வது கடலோரக் காவல் படை தின முழக்கமாகக் கொண்டு செயலாற்றி வருகிறோம். கடந்த 43 ஆண்டுகளில் பல்வேறு பேரிடா் காலங்களில் கடலில் தத்தளித்த 9701 போ் பத்திரமாக இப்படையினா் சாா்பில் மீட்கப்பட்டுள்ளனா். கடத்தல் உள்ளிட்டவைகளில் ஈடுபட்ட 14,991 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவசர காலங்களில் உடல் நலக் குறைபாடு ஏற்பட்ட 377 போ் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
ஆளுநா் வாழ்த்து:
இந்நிலையில் 43-வது ஆண்டு கடலோரக் காவல்படை தின கொண்டாட்டம் சென்னையிலுள்ள கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய தலைமை அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பு மலரை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்தாா். இதில் கிழக்குப் பிராந்தியத் தளபதி எஸ்.பரமேஷ், ஆற்காடு இளவரசா் முகம்மது அப்துல் அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.