தமிழ்நாடு

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் வீரவசந்தராயர் மண்டபத்தை புனரமைக்க அரசு ஒப்புதல்: தக்கார் கருமுத்து தி.கண்ணன் தகவல்

1st Feb 2020 02:43 AM

ADVERTISEMENT

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ரூ.18.10 கோடியில் வீரவசந்தராயர் மண்டபத்தைப் புனரமைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்தி: கடந்த 2018 பிப்ரவரி 2-இல் நிகழ்ந்த தீ விபத்தில் வீரவசந்தராயர் மண்டபம் பெருமளவில் சேதமடைந்தது. சேதமடைந்த பகுதிகள் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு புகைப்படங்கள் மற்றும் வரைபடங்கள் அடிப்படையில் வேலைக்கான வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தை முழுமையாகச் சீர்செய்து ஏற்கெனவே இருந்தவாறு கோயிலின் புராதன கலைநயத்துடன் அதேபோன்று நேர்த்தியாகச் சீரமைப்பதற்கான ரூ.18.10 கோடி மதிப்பிலான திட்டம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சிறந்த சிற்பக் கலைஞர்கள், ஐஐடி வல்லுநர்களை ஈடுபடுத்தி வீரவசந்தராயர் மண்டபத்தின் பழைய தன்மையும், கலையழகும் மாறாத வகையில் எழில் தோற்றத்துடன் மீண்டும் புனரமைக்கப்பட உள்ளது.
 இதற்காக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் பட்டிணம் கிராமத்தில் உள்ள கல்குவாரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு அனுமதியும் வழங்கியுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கி சுமார் 2 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும். நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவுடன் பக்தர்களின் பயன்பாட்டுக்கு வீரவசந்தராயர் மண்டபம் திறந்து வைக்கப்படும்என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT